Cauvery Water Issue: இன்று கூடும் காவிரி மேலாண்மை ஆணையம்.. முரண்டு பிடிக்கும் கர்நாடகா! தமிழ்நாட்டிற்கு கிட்டுமா நியாயம்?
காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் இன்று (நவம்பர் 3ம் தேதி) கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் இன்று (நவம்பர் 3ம் தேதி) கூடுகிறது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயத்திற்கான தண்ணீரை தர கர்நாடகா மறுப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது.ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தான் பெற வேண்டியதாக உள்ளது. இந்த முறையும் கூட சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென குறைத்தது.
முன்னதாக கடந்த 30 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 89 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 மாவட்ட அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் இருதரப்பு வாதங்களும் கேட்டுக்கொண்ட ஒழுங்காற்று குழு வருகிற 15 ஆம் தேதி வரை கர்நாடகாவிலிருந்து 2,500 கன அடி நீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கர்நாடக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் வலியுறுத்தினர். ஆனால் 2,500 கன அடி நீர் தர முடியாது என்றும் போதிய தண்ணீர் இல்லை என கூறி அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கூடும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இன்று கூடும் கூட்டம் தொடர்பாக் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர், “கர்நாடகா தரவேண்டிய அளவு 16.44 டிஎம்சி, அதையும் அவர்கள் தரவில்லை. இதுவரை கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த அரசுகள் இவ்வளவு முரண் பிடித்தது இல்லை. தற்போது இருக்கும் கர்நாடக அரசு, எதிரி நாட்டில் மோதுவதுபோல் நினைக்கிறார்கள், நாம் ஏதோ அவர்களிடம் சலுகை கேட்பது நினைக்கிறார்கள். இந்த நாட்டினுடைய உச்சநீதிமன்றம் விதித்த விதிப்படிதான், இந்த நாட்டில் வாழும் மக்கள் நடக்க வேண்டும்.
ஆனால், ஒரு அரசே உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுபடமால் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீர்வளத்துறையை பார்த்து வருகிறேன். அதேபோல், பத்து முதல் பதினைந்து முதலமைச்சர்களை கடந்து வந்திருக்கிறேன், நீர்வளத்துறை அமைச்சர்களை பார்த்து இருக்கிறேன். இதில், என்ன கொடுமை என்றால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எனக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றாக தெரிந்தவர். அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சரும் எனக்கு வேண்டியவர்தான். ஆனால், இவர்கள் பிடிவாதமாக இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
வருகின்ற நவம்பர் 3ம் தேதி காவிரி மேலாண்மை கூட்டத்தில் எவ்வளவு அளவு நீர் வேண்டும் என்பதை அறிவுறுத்துவோம். அங்கேயும் நமக்கான நீதி கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடைபெறும் திட்டப்பணிகள்: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு !