Karnataka Hijab Row | பற்றி எரியும் ஹிஜாப் விவகாரம்... கல்லூரி நிர்வாகம், மாணவிகள், நீதிமன்றம், அரசு சொல்வது என்ன?
ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அம்மாநில எதிர்க் கட்சிகள் முஸ்லிம் மாணவிகளின் அடிப்படை உரிமைகளைக் காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர இரண்டு நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே இன்று (பிப்.5) இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அம்மாநில எதிர்க் கட்சிகள் முஸ்லிம் மாணவிகளின் அடிப்படை உரிமைகளைக் காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவிகள் கூறும்போது, ''2021- 22ஆம் ஆண்டு கல்லூரி விதிமுறைக் கையேட்டில், நாங்கள் (மாணவிகள்) கல்வி வளாகத்தில் ஹிஜாப் அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சீருடையின் நிறத்தில் இருக்க வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்குப் பின்னணியில் இந்துத்துவ சக்திகளின் அழுத்தமே காரணமாக இருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே 1 மாதத்துக்கு முன்னதாக, உடுப்பி அரசு பியுசி கல்லூரியில் ஹிஜாப் அணிந்த 6 மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் கல்லூரிக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளர்ச்சிக் குழு, தங்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இத்தகைய செயல்களால் மதச் சுதந்திரத்தின்படி, மாணவிகள் ஹிஜாப் அணிவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
மதச் சுதந்திரம் பற்றி அரசியலமைப்பு சொல்வது என்ன?
சுதந்திரமாகவும் மனசாட்சியின்படியும் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதற்கும், அதைப் பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்குமான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் 25 பிரிவு 1 உறுதி செய்கிறது. மாநிலங்கள் இந்த மதச் சுதந்திரத்தில் யாரும் தலையிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனினும் பிற அனைத்து அடிப்படை உரிமைகளைப்போல, பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் மற்றும் பிற நலன்களின் அடிப்படையில் ஒரு மாநிலத்தால் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
ஹிஜாப் அணிவது பற்றி நீதிமன்றம் சொல்வது என்ன?
பல்வேறு காலகட்டங்களில் ஹிஜாப் அணிவது பற்றி, நீதிமன்றங்களில் விவாதம் எழுந்துள்ளது. ஒவ்வொரு நீதிபதியும் வெவ்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
பள்ளிச் சீருடை குறித்து ஃபாத்திமா தஸ்நீம் வெர்சஸ் கேரள அரசு (2018) குறித்த வழக்கில், மனுதாரரின் தனிப்பட்ட உரிமைகளைக் காட்டிலும் ஒரு நிறுவனத்தின் உரிமைகள் முதன்மைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 12 மற்றும் 8 வயதுச் சிறுமிகளின் தந்தையான மனுதாரர், தனது மகள்களைப் பள்ளியில் ஹிஜாப் மற்றும் முழுக்கை சட்டை அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். நீதிபதி வினோத் சந்திரன், மனுதாரரின் குழந்தைகள் தற்போது பள்ளியில் படிக்கவில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
எனினும் 2015-ல் கேரள உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, சிபிஎஸ்இ அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதும்போது ஹிஜாப் அணியவும், முழுக்கை அணியவும் 2 முஸ்லிம் சிறுமிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அரசு சொல்வது என்ன?
இந்த சூழலில் கர்நாடக அரசு அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் ஏற்கெனவே உள்ள சீருடை தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. அடுத்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் இதுதொடர்பாகத் தீர்ப்பளிக்கும் வரையில் அதையே பின்பற்றுமாறும் தெரிவித்துள்ளது.
எனினும் கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ், ''இந்தப் போராட்டத்தின் பின்னணியில் நாட்டுக்கு எதிரானவர்களின் சதி உள்ளது. இந்தியா உலக அளவில் உயர்ந்து நிற்பதையும் நம்முடைய பிரதமருக்கு சர்வதேச அளவில் மரியாதை கிடைப்பதையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சர் சுனில் குமார் கர்கலா கூறும்போது, ''முத்தலாக் நடைமுறையை நீக்கி முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாகத்தான் எங்களுடைய அரசு உள்ளது. தனிப்பட்ட நபர்களின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் எல்லோரும், மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைப் பற்றியும் பேசுங்கள். அரசு வளாகத்துக்குள் அனைவரும் ஒரேமாதிரியான சீருடைத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து'' என்று தெரிவித்துள்ளார்.
கல்லூரிக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல
கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ''மாணவர்கள் கல்லூரிக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல. மத அடையாளங்களை வழிபாட்டுத் தலங்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். கல்வி நிறுவனத்தில் சீருடை என்பதை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏனெனில் சீருடைதான் மாணவிகளிடையே வேறுபாட்டை மறந்து, இந்தியர் என்று உணர வைக்கவும் ஒற்றுமைப்படுத்தவும் உதவுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
ஆற்றல் துறை அமைச்சர் சுனில் குமார், ''உடுப்பி இன்னொரு தாலிபானாக மாறுவதை அனுமதிக்க முடியாது. மாணவர்கள் தங்களின் மத நம்பிக்கைகளைத் தாண்டி, கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம்
காங்கிரஸ் மாநிலத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொள்வது அவர்களின் உரிமை. இதை பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். மாணவிகள் அழுது கொண்டிருக்கும்போது கல்லூரி முதல்வர், வாயில் கதவுகளை மூடியது சற்றும் மனிதத் தன்மையற்ற செயல்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ''ஒரு மாதமாக இந்தப் பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், அரசு என்ன செய்கிறது? இன்று உடுப்பியில் நடப்பது, நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கும். அரசு உடனடியாக இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும். முஸ்லிம் பெண்களுக்கு இதன்மூலம் கல்வி மறுக்கப்படுகிறது'' என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தைக் களவாடுகிறோம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சரஸ்வதி அன்னை அனைத்து மாணவர்களுக்கும்தான் அறிவைத் தருகிறார் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஹிஜாப் அணிந்தோரை அனுமதிக்காத செயல்கள் மூலம், இந்தியாவின் மகள்களுடைய எதிர்காலத்தைக் களவாடுகிறோம். கல்வித் தாய் சரஸ்வதி அனைத்து மாணவர்களுக்கும்தான் அறிவைத் தருகிறார். அவர் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மாணவிகள் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணியும் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.