கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!
இந்த விவகாரம் குறித்தும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பது பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் பல்வேறு பொதுநலன் வழக்குகள் மும்பையில் தொடுக்கப்பட்டுள்ளன
மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தை மாநிலங்களுக்கு வழங்குவதில் பாகுபாடு காட்டுவதில்லை என மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், ”மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துகளை சீராக முறையான கால இடைவெளியில் மைய அரசு வழங்கிவருகிறது. இதில் பயன்படுத்தப்படும் ஆம்பிடெரிசின் பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அனைத்து மாநிலங்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கூறினார்.
மேலும், “மாநில அரசுகள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு உரியபடி கிடைக்கின்ற அளவு மருந்துகளை மத்திய அரசு ஒதுக்குவதில் யாரும் குறைகூற முடியாது. மருந்தைத் வழங்குவதற்கான அனைத்து வழிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இதற்காக தனி பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது; அதை உச்ச நீதிமன்றம் கண்காணித்துவருகிறது. அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் இருந்து அண்மையில் தயாரிக்கப்பட்ட அதிகத் திறன்வாய்ந்த ஆம்போடெரிசின் பி மருந்தை இறக்குமதி செய்வதற்கு ஆறு மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.” என்றும் அனில் சிங் தெரிவித்தார்.
முன்னதாக, கரும்பூஞ்சைத் தொற்றுக்கான மருந்துகளை மகாராஷ்டிர மாநிலத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசு சமமான முறையில் பகிர்ந்தளிக்கிறதா என்பது குறித்து மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்து மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி அனில் சிங் விவரித்தார். ”கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு அன்றாடம் 15 ஆயிரம் குப்பிகள் எனும் கணக்கில் இதுவரை 1,40,260 குப்பிகள் ஆம்போடெரிசின் பி மருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் மொத்தம் 6 இலட்சத்து 70 ஆயிரம் குப்பிகளே அளிக்கப்பட்டுள்ளன” என்றும் அனில் சிங் கூறினார்.
மகாராஷ்டிர மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி, மாநிலத்துக்கு அன்றாடம் 17, 500 ஆம்போடெரிசின் பி மருந்து தேவைப்படுவதாகக் கூறினார். கடந்த 15ஆம் தேதிவரையிலான மகாராஷ்டிர மாநில கரும்பூஞ்சை பாதிப்பு பற்றிய ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, மகாராஷ்டிரத்தில் 7ஆயிரத்து 511 கரும்பூஞ்சை பாதிப்பு பதிவாகியுள்ளது. அவர்களில் குறைந்தது 75 பேராவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இறந்துள்ளனர். கும்பகோனி கூறியதில் இன்னொரு முக்கிய தகவல், ஆம்போடெரிசின் பி மருந்தை மகாராஷ்டிர அரசாங்கமே ஹாஃப்கின் பயோ நிறுவனத்துடன் இணைந்து கூட்டாகத் தயாரித்துவருகிறது என்பது. ஜூன் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் 40 ஆயிரம் குப்பிகள் மருந்தை அதிலிருந்து பெறமுடியும்” என்றும் அவர் கூறினார்.
கடந்த 10ஆம் தேதியன்றே ஆரம்பகட்ட உற்பத்தி முடிந்துவிட்டது என்றும் கிருமிநீக்கப் பணியால் தாமதமாகிவிட்டதாகவும் கும்பகோனி தெரிவித்தார்.
மும்பை மாநகராட்சி சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அனில் சாக்ரே, மும்பை நகரில் மட்டும் 282 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்றார். வழக்கின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் அன்றைய தினம் தங்களின் பிரமாண வாக்குமூலத்தை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்தும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மகாராஷ்டிர அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பது பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் பல்வேறு பொதுநலன் வழக்குகள் அங்கு தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீதிமன்றம் மொத்தமாக விசாரித்து வருகிறது
Also Read : சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது