Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: ராமதாஸ் நிறுவிய பாமக கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அன்புமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Anbumani Ramadoss PMK: பாமக கட்சியை அன்புமணி முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக உதவகூடும் என கருதப்படுகிறது.
பகிரங்கமான ராமதாஸ் - அன்புமணி மோதல்:
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திலேயே, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே ஒத்த கருத்த இல்லை என கூறப்பட்டது. தொடர்ந்து, அக்கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததை, பொதுக்குழு கூட்டத்திலேயே அன்புமணி எதிர்த்தது, தந்தை ராமதாஸ் உடனான அவரது மோதலை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. இந்நிலையில் தான், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவருக்கு தலைமைப் பண்பு என்பதே இல்லை எனவும், பாஜகவுடன் கூட்டணி வைக்க தனது காலை பிடித்து அழுதார் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். அதோடு, செயல் தலைவர் பதவியை ஏற்று செயல்படுவேன் என அன்புமணி அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுதினார். இதனால், அவர்கள் இருவர் இடையேயான மோதல் கட்சி பிளவுபடும் விதமாக வெடித்துள்ளது.
நான் தான் தலைவர்..
இந்த மோதல்களுக்கு இடையே அண்மையில், அன்புமணி வகித்து வந்த தலைவர் பதவியை இனி நானே ஏற்கிறேன் என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், பொதுக்குழு கூட்டி தலைவராக நியமிக்கப்பட்டவன் என்பதால் அந்த பதவியில் தானே தொடர்வதாக அன்புமணி அறிவித்தார். இந்நிலையில் தான், செயல் தலைவர் பதவியை ஏற்று செயல்பட வேண்டும் என தனது மகனுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதை ஏற்று நடக்க அன்புமணிக்கு துலியும் விருப்பமில்லை என்பதே தைலாபுர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கட்சியை ஒட்டுமொத்தமாகவே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அவர் திட்டமிடுவதாக தெரிகிறது. அதற்கான முக்கிய நடவடிக்கையாக, தனது அறிவுறுத்தலையும் மீறி ராமதாஸ் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை கட்சியை விட்டே நீக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
பாஜகவின் ஆசி:
பாஜக உடன் கூட்டணி அமைக்க தனக்கு விருப்பம் இல்லை எனவும், அதிமுகவுடன் சேர்ந்து பயணிக்கவே அன்புமணியை கூட வலியுறுத்தியதாகவும் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஆனால், அந்த வலியுறுத்தலையும் மீறி தான் பாமக - பாஜக கூட்டணி அமைந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டியே அன்புமணியை தங்களது கூட்டணிக்கு பாஜக வரவழைத்தாக கூறப்படுகிறது. அதேநேரம், அன்புமணி வன்னிய சமூக செல்வாக்கை தங்களுக்கான வாக்குகளாக மாற்ற பாஜக முயல்கிறது. இதனால், தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட ராமதாஸை காட்டிலும், கூட்டணி சேர துடிக்கும் அன்புமணிக்கே தங்களது ஆதரவை வழங்க பாஜக முனைப்பு காட்டுகிறது. இதன் மூலம், பாமகவை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவது அன்புமணிக்கு எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது.
வடநாட்டு ஃபார்முலா
கட்சிகள் உடைவது என்பது இந்திய அரசியலில் புதியது அல்ல. ஆனால், அப்படி நடக்கும்போது நிறுவனருக்கே உரிமையில்லை, பிரிந்து சென்றவர்களுக்கே கட்சி சேரும் என்ற தீர்ப்புகள் எல்லாம் அண்மைக்காலமாக வட இந்தியாவில் அரங்கேறி வருகின்றன. உதாரணமாக சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுகளை குறிப்பிடலாம். அதிகபட்ச நிர்வாகிகளின் ஆதரவு யாருக்கு உள்ளதோ, அவர்களுக்கே கட்சி என்ற அடிப்படையில் நீதிமன்றமும் தீர்ப்பளிக்கின்றன. தமிழ்நாட்டில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இடையேயான மோதலின்போதும் நீதிமன்றம் இதே தீர்ப்பையே அளித்தது. இப்படி கட்சியை பிளவுபடுத்தி தலைமை பதவிக்கு வரும் தலைவர்கள் அனைவரும், பாஜகவிற்கே ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாமகவிலும் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளனர். அதன்மூலம், ஒட்டுமொத்த பாமகவும் விரைவில் அவர் வசம் செல்லும் என கருதப்படுகிறது. பாமகவை நிறுவிய ராமதாஸ் தைலாபுரம் தோப்பில் தனிமரமாக்கப்படலாம் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.





















