Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Impact Makers Conclave: ரூ.1000 மின் கட்டணமாக கட்டும்போது, அதனால், 8 டன் அளவிற்கு கார்பன் உமிழ்விற்கு நாம் காரணமாகிறோம் என்ற அதிர்ச்சித் தகவலை, ஐஜிபிசி-ன் சென்னை தலைவர் தெரிவித்தார்.

ஏபிபி நாடு நடத்திய தடம் பதிக்கும் தமிழகம் கருத்தரங்களில், கொள்கை சீர்திருத்தங்கள், நிலையான கண்டுபிடிப்புகள் மூலம், வளர்ச்சியை சீராக்குதல் என்ற தலைப்பில், க்ரெடாய் அமைப்பின் தலைவர் ஹபீப், ஐஜிபிசி-யின் சென்னை தலைவர் மகேஷ் ஆனந்த், விஜிஎன் குழும நிர்வாக இயக்குனர் பிரதீஷ், எஸ்பிஆர் இந்தியாவின் இயக்குனர் நவீன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய ஐஜிபிசி-ன் சென்னை தலைவர், நாம் 1000 ரூபாய் கட்டணம் வரும் அளவிற்கு மின்சாரத்தை பயன்படுத்தும்போது, 8 டன்கள் கார்பன் வெளியிடப்படுவதாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார்.
பசுமை கட்டிடங்களை உருவாக்கிவரும் விஜிஎன் மற்றும் எஸ்பிஆர்
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், பசுமை கட்டிடங்களை உருவாக்கி வருகிறது, விஜிஎன் மற்றும் எஸ்பிஆர் நிறுவனங்கள். பசுமை கட்டிடங்கள் என்பது, பல வகைகளில், இயற்கையை மாசுபடுத்தாமல் உருவாக்கப்படுவது தான். அந்த வகையில், இந்நிறுவனங்கள் கட்டும் பிரமாண்ட டவுன்ஷிப் அப்பார்ட்மென்ட்களில், தண்ணீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு என பல்வேறு வகைகளில் இயற்கையை பாதுகாக்கும் வகையில், தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம், ஏராளமான மாசுபாடுகள் தடுக்கப்படுவதுடன், உடல் நலனுக்கும் நன்மை பயப்பதாக உள்ளது.
இத்தகைய கட்டிடங்களை உருவாக்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான க்ரெடாய் அமைப்பு, மற்றும் இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில்(ஐஜிபிசி) ஆகியவை பல்வேறு வகைகளில் உதவி வருகிறது. இவ்விரு அமைப்புகளும் பல்வேறு கொள்கைகளை உருவாக்கி, பசுமை கட்டிடங்கள் கட்டுவதற்கு ஊக்குவிக்கின்றன.
“ரூ.1000 கரண்ட் பில் கட்டினால் 8 டன் கார்பன் வெளியேறும்“
இந்த நிகழ்வில் பேசிய ஐஜிபிசி-யின் சென்னை தலைவர் மகேஷ் ஆனந்த் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அதாவது, நாம் 1000 ரூபாய் மின்சார கட்டணம் கட்டும் அளவிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை உருவாக்க, 8 டன்கள் கார்பன் உமிழப்படுவதாக தெரிவித்தார். நாம் 100 அல்லது 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த, சுமார் 600 யூனிட்டுகள் மின்சாரத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார். அதனால், நாம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும், பசுமை கட்டிடங்கள், ஆளில்லாத நேரத்தில் மின்விளக்குகளை தானாக ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வகையிலான சென்சார்களை பொருத்துவது உள்ளிட்ட சில தொழில்நுட்பங்களுடன் கட்டப்படுவதால், 20 சதவீத மின்சாரத்தை சேமிப்பதாக அவர் தெரிவித்தார். அதோடு, க்ரீன் ப்ரோ அங்கீகாரம் பெற்ற 7000 பொருட்கள் உள்ளதாகவும், மக்கள் அத்தகைய பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விஜிஎன், எஸ்பிஆர் கட்டிடங்களில் பசுமைத் திட்டங்கள்
இதேபோல், விஜிஎன் நிறுவனம் தாங்கள் கட்டும் கட்டிடங்களில், சிங்க்குகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்தீகரித்து மீண்டும் குடிநீர், சமையல் அல்லாத பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் வகையிலும், சென்சார்கள் மூலம் மின்சார சேமிப்பு, மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட பசுமை கட்டிடத்திற்கான பல அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக, விஜிஎன் நிர்வாக இயக்குனர் மற்றும் எஸ்பிஆர் நிறுவனத்தின் இயக்குனர் ஆகியோர் தெரிவித்தனர்.
பசுமை கட்டிடங்களில் க்ரெடாயின் பங்கு
பசுமை கட்டிடங்கள் கட்டுவதை ஊக்குவிக்க, ஐஜிபிசியுடன் இணைந்து பல கொள்கைகளை உருவாக்கி, அதனை கட்டுமான நிறுவனங்களுக்கு பகிர்வதாக க்ரெடாய் அமைப்பின் தலைவர் ஹபீப் தெரிவித்தார். மேலும், பசுமை கட்டிடங்களை ஊக்குவிக்க, அரசு சார்பில் வரிச் சலுகைகள், பத்திரப் பதிவில் சலுகைகள், ஜிஎஸ்டி-யில் சலுகைகளை வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார். தற்போது, பசுமை கட்டிடங்களுக்கான செலவுகள் அதிகமாக இருப்பதால், பெரும் நிறுவனங்கள் மட்டுமே அத்தகைய கட்டிடங்களை கட்டுவதாகவும், அதை நடுத்தர நிறுவனங்களுக்கும் கடத்தும் வகையில், பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் க்ரெடாயின் தலைவர் ஹபீப் தெரிவித்தார்.
“அரசும், பிரபலங்களும் ஊக்குவிக்க வேண்டும்“
என்னதான் கட்டிடத் துறை உள்ளிட்ட பல இடங்களில் பசுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும், அரசும், சினிமா பிரபலங்கள் போன்றோர், பசுமைக்கான ஊக்குவிப்பை முன்னெடுத்தால் அது நல்ல பலனை கொடுக்கும் என எஸ்பிஆர் நிறுவனத்தின் இயக்குனர் நவீன் தெரிவித்தார்.
இதுவும் சரியான கருத்தாகத்தான் உள்ளது. பிரபலங்கள் ஒரு விஷயத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, அது மக்களிடம் நன்றகவே சென்று சேரும்.





















