அதிகாலையில் துப்பாக்கிச்சூடு... களத்திற்கே சென்ற மணிப்பூர் முதலமைச்சர்.. ஓயாத பதற்றம்
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திற்கே சென்று ஆய்வு மேகொண்டுள்ளார் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங்
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.
இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட குகி பழங்குடி சமூக மக்கள் மீது மாநில காவல்துறை திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக அச்சமூகத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் பாஜக அரசு மீது அக்கட்சியை சேர்ந்த குகி பழங்குடி சமூக எம்எல்ஏக்களே புகார் அளித்திருப்பதுதான்.
பற்றி எரியும் மணிப்பூர்:
அதே சமயத்தில், குகி சமூகத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு அசாம் ரைபிள்ஸ் படை பிரிவு வீரர்கள் உதவுவதாக மெய்டீஸ் சமூக மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, தொடர் துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
விஷ்ணுபுரம் மாவட்டம் கொய்ஜுமந்தாபி கிராமத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிராமவாசிகள் இருவர் கொல்லப்பட்டனர். பதுங்கு குழிக்கு கிராமவாசிகள் காவல் காத்து வந்ததாகவும் அப்போதுதான் இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
களத்தில் இறங்கிய முதலமைச்சர்:
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திற்கே சென்று ஆய்வு மேகொண்டுள்ளார் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங். சம்பவ இடத்தில் பைரன் சிங் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் நோக்கில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பழங்குடியின கிராமங்கள் மீதான தாக்குதலுக்கு பழங்குடி தலைவர்கள் மன்றம் (ஐடிஎல்எஃப்) கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஐந்து கிராம மக்கள் கடத்தப்பட்டுள்ளதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐடிஎல்எஃப் வெளியிட்ட அறிக்கையில், "இந்த கண்டிக்கத்தக்க செயல், வெளி மணிப்பூரில் உள்ள பழங்குடியின சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது. மணிப்பூரில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.
இந்த சூழலில்தான், மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வெடித்த வன்முறைதான் தற்போது வரை நீடிக்கும் கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இரண்டு மாதங்களாக தொடர்ந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.