கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: போலி விண்ணப்பங்கள் குறித்து ஆட்சியர் எச்சரிக்கை - பயனடைய சரியான வழிமுறைகள் இதோ!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் திட்டங்களின் ஒன்றான பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என கூறி திமுக அரசால் செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், இரண்டாம் கட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஜூலை 15, 2025 முதல் அக்டோபர் 15, 2025 வரை செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பப் படிவங்கள் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே விநியோகிக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார். மேலும் போலி விண்ணப்பங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.
திட்டத்தின் நோக்கம்
குடும்பத்திற்காக அயராது உழைக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என கூறி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி, பெண்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதிசெய்து, குடும்பப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய கருவியாகப் பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட செயலாக்கம்
முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டு பலருக்கு இதில் தகுதிகள் காரணமாக இத்திட்டத்தில் இணைய முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாம் கட்டமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பல தகுதியான குடும்பத் தலைவிகள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் விடுத்துள்ள செய்தி அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 130 இடங்களில் நடைபெறவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே விநியோகிக்கப்படும் என்றும், இந்த முகாம்கள் ஜூலை 15, 2025 அன்று தொடங்கி அக்டோபர் 15, 2025 வரை மூன்று மாத காலத்திற்கு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
போலி விண்ணப்பங்கள் குறித்து எச்சரிக்கை
மிக முக்கியமாக, ஆட்சியர் தனது அறிவிப்பில், தனியார் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் போலியாக விற்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். அரசின் திட்டங்களில் பொதுமக்களை ஏமாற்றி ஆதாயம் தேடும் முயற்சிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்தகைய போலி விண்ணப்பங்களை வாங்கி யாரும் தங்கள் பணத்தையோ, நேரத்தையோ வீணடிக்க வேண்டாம் என்றும், அரசின் அங்கீகரிக்கப்பட்ட முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் செய்ய வேண்டியவை
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே பெற வேண்டும்.
- போலி விண்ணப்பங்களை புறக்கணிக்க வேண்டும்.
- திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அணுகி தெளிவு பெறலாம்.
- தங்களது விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் முகாம்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி திட்டத்தின் பலன்களைப் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.























