பாஜகவினர் அனைவரும் என்ன ஹரிசந்திராவின் உறவினர்களா? - மணீஷ் சிசோடியா கைது விவகாரத்தில் தெலங்கானா அமைச்சர் கேடிஆர் தடாலடி..!
டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
எதிர்க்கட்சி ஆளும் பல்வேறு மாநிலங்களில் பாஜக தங்களின் அரசுகளை அமைக்க முயற்சி செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அங்கு பாஜக ஆட்சி அமைத்தது.
சிவசேனா விவகாரம்:
அதேபோல, மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது. பாஜகவின் துணையோடு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தன்னுடைய கட்சியை இரண்டாக உடைத்து முதலமைச்சரானார். சிவசேனா கட்சி எம்எல்ஏக்களுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு கட்சி மாற 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் அளிக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை வெளியிட்ட பகீர் தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பணம் கொடுக்க முயற்சித்தவர்களுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை கூறியிருந்தது.
குறிவைக்கப்படும் எதிர்கட்சிகள்?
எதிர்கட்சிக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார் என அவரது கட்சி நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்வதற்கு முன்பு, பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ், "மோடியின் செயல் ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது.
வேண்டும் பொழுது எல்லாம், அனைத்து வகையிலும் எதிர்க்கட்சிகளை குறிவைப்பது; ஒன்று கட்சிகளைப் பிளவுபடுத்துவது அல்லது அவர்களின் எம்எல்ஏக்களை வாங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கலைப்பது.
எதுவும் செய்ய முடியவில்லை என்றால், அவர்களின் ஒரே கூட்டாளிகளைப் பயன்படுத்துவது; சிபிஐ, அமலாக்கத்துறை & வருமான வரித்துறை மூலம் துன்புறுத்துவது. அவதூறு பிரச்சாரத்தைத் தொடங்குவது.
கேடிஆர் சரமாரி கேள்வி:
அதற்கு ஆதரவாக, பணம் கொடுத்து ட்ரோல் ஆர்மியை களம் இறக்குவது. கடந்த 8 ஆண்டுகளில் பாஜக தலைவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் மீது எத்தனை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை & சிபிஐ ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன? பாஜகவினர் அனைவரும் என்ன ஹரிச்சந்திராவின் உறவினர்களா?
கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், எப்படி பிரதமரின் ஆட்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி குறி வைக்கப்படுகின்றனர் என்பதை நாடு கவனித்து வருகிறது" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிட்டிங் துணை முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது அரிதான நிகழ்வு ஆகும். இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான், சிட்டிங் முதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். அது, வேறு யாரும் அல்ல. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.