போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்களை அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு இந்தியா தாக்கி அழித்து வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீருக்கு ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்களை அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு இந்தியா தாக்கி அழித்து வருகிறது. ட்ரோன் தாக்குதல் மட்டும் இன்றி ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை காற்றில் பறக்கவிட்ட பாகிஸ்தான்!
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது? ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களில் வெடி சத்தம் கேட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இருளில் மூழ்கிய எல்லைப்பகுதிகள்:
உதம்பூருக்கு அனுப்பப்பட்ட ட்ரோன்களை இந்தியா ராணுவம் தாக்கி அழிக்கும் காட்சியினை ஏஎன்ஐ (ANI) செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து உதம்பூர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சால்மர், பஞ்சாபின் ஃபிரோஸ்பூர், மோகா, பதான்கோட் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதிகளில் ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இஸ்ரேல், ரஷியா, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி, பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா தவிடுபொடியாக்கியது. தொடர்ந்து இரண்டு நாளாக நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்தது.
காஷ்மீரில் உச்சக்கட்ட பதற்றம்:
இதையடுத்து, தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, போர் நிறுத்தம் செய்வதாக இருநாடுகள் அறிவித்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில மணி நேரங்களிலேயே, காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ட்ரோன்கள் தென்பட்டதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.





















