Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
பாகிஸ்தான் மீது தொடுக்கப்பட்டுவரும் ஆபரேஷன் சிந்தூரின் நிலை குறித்து விளக்கமளித்த வெளியுறவுத்துறை மற்றும் ராணுவம், பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை இந்தியா நடத்திவருகிறது. ஆனால், பாகிஸ்தானோ, இந்திய அப்பாவி மக்களை குறி வைத்து தாக்கி வருகிறது. ஆபரேஷன் சிந்தூரின் தற்போதைய நிலை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த வெளியுறவுத்துறை மற்றும் ராணுவம், பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரின் பஹல்காமில், தீவிரவாதிகள் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை கடந்த 7-ம் தேதி இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி இந்திய மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்திவருகிறது. பாகிஸ்தானின் பெரும்பாலான தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. எனினும், இந்திய தரப்பில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டு, சில இடங்களில் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
எல்லைக் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், இந்திய ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவர்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
போர் பதற்றத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தான் பாகிஸ்தான் எடுத்து வருவதாகவும், பொறுப்பான முறையில் இந்தியா பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது என்றும், இந்தியாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வதந்திகளை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் விக்ரம் மிஸ்ரி.
மேலும், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அதிக அளவில் ராணுவத்தை குவித்து வருவதாக தெரிவித்த அவர், இந்திய ஆயுதப்படைகள் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக கூறினார். பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பதுதான் பாகிஸ்தானின் நோக்கம் என்றும், இன்று அதிகாலையில் அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு, பஞ்சாப் விமானப்படை தளத்தை தாக்க அவர்கள் முயன்றதாவும் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அதோடு, மதத் தலத்தில் இந்தியா ஏவுகணைகள் வீசியதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது எனவும் அவர் கூறினார்.
கர்னல் சோபியா குரேஷி கூறியது என்ன.?
இதேபோல், செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷி, நேற்றிரவு முதல் அதிகாலை வரை, பாகிஸ்தன் 26 முறை இந்தியாவை தாக்க முயற்சித்ததாகவும், பஞ்சாபில் உள்ள விமானப் படைத்தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியதால், இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார்.
அதிகாலையில், இந்தியாவை தாக்க, பாகிஸ்தான் அதிவேக ஏவுகணையை பயன்படுத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா பாலிஸ்ட்டிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக கர்னல் சோபியா கூறினார்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படைத் தளத்தையும் பாகிஸ்தான் குறி வைத்துள்ளதாக கூறிய அவர், ஸ்ரீநகரில் உள்ள பள்ளி, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.





















