IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
இந்தியா - பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ளதால் பாதியிலே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சூழலில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலே நிறுத்தப்பட்டது. கடந்த 8ம் தேதி நடந்த பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியிலே நிறுத்தப்பட்டது.
முடிவுக்கு வந்த மோதல்:
பின்னர், ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த தொடர் பாதியிலே நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு வேதனையை அளித்தாலும் நாட்டின் பாதுகாப்பு, ராணுவத்தினருக்கு பக்கபலமாக நிற்கும் விதமாக ரசிகர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர்.
இந்த சூழலில் இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த இரு நாடுகள் மட்டுமின்றி மற்ற நாடுகளும் சண்டையை விரும்பவில்லை. இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக இரு நாடுகளிலும் எல்லையில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளானார்கள்.
மீண்டும் தொடங்கும் ஐபிஎல்?
இந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்கா எடுத்த முயற்சியால் இந்தியா - பாகிஸ்தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் தலையீட்டால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
12ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் இந்த மோதல் நிரந்தரமாக முடிவுக்கு வரும் பட்சத்தில் ஐபிஎல் மீண்டும் தொடரும் என்று கருதப்படுகிறது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திட்டமிட்ட இடங்களிலே ஐபிஎல் தொடர் மீண்டும் நடக்குமா? அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. நாளை மறுநாள் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு பிறகு எஞ்சிய போட்டிகளுக்கு ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புது அட்டவணை
தற்போதைய ஐபிஎல் அட்டவணைப்படி குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை முதல் நான்கு இடங்களில் உள்ளது. இந்த தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி 25ம் தேதி முடிக்கும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஜுன் மாதம் வரை ஐபிஎல் நீடிக்கும் என்று கருதப்படுகிறது. அதேசமயம் வெளிநாட்டு வீரர்களின் இருப்பு, இந்திய அணிக்கான அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொண்டு எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று கருதப்படுகிறது.




















