இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம், குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு
இந்திய எல்லையில் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருவதாக இருந்த குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா செல்லவுள்ளார் அன கூறப்பட்டிருந்தது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணையதளத்தில், 18,19 ஆகிய தேதிகளில் யாரும் முன்பதிவு செய்ய வழிவகை இல்லை. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக தமிழ் மாதம் 1-ம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். அப்போது பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். வைகாசி மாதத்திற்கான மாதாந்திர பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறக்கிறது. 19-ம் தேதி இரவு 10 மணிவரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு வரும் 18-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கேரள காவல்துறை மற்றும் சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணையதளத்தில், 14-ம் தேதி மலை 5 மணி முதல் 17-ம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது. 18 மற்றும் 19-ம் தேதிகளில் முன்பதிவு செய்ய வழிவகை ஏற்படுத்தவில்லை. இந்த இரண்டு நாள்களில் ஏதாவது ஒருநாள் ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்பது உறுதி ஆகியிருந்தது.
கோட்டயம் குமரகத்தில் ஜனாதிபதி தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்வதில் தீவிரமாகப்பட்டிருந்தது. குறிப்பாக நிலக்கல் முதல் சபரிமலை வரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மீதான போர் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. பாகிஸ்தான் உடனான மோதல் காரணமாக இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் குடியரசுத் தலைவரின் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “குடியரசுத் தலைவர் வருகை ரத்து செய்யப்படவில்லை. எல்லையில் போர்ச் சூழலால் பதற்றம் அதிகரித்துள்ளதால் அவரின் வருகை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே 18,19-ம் தேதிகளில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்,” என்றார்.





















