காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்திக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்ட விவகாரம் – நடந்தது என்ன?
பாஸ்போர்ட் விதிமுறைகள் சட்டம், 1967, பிரிவு 6(C)ன் கீழ் மெஹபூபா முஃப்தி இந்தியாவை விட்டு வெளியேறுவது நாட்டுப் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கும் என்கிற அடிப்படையில் அவருக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்திக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் புதிய பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளது. புதிய பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து இரண்டு மாதங்களான நிலையில் தனக்கு இன்னும் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்கிற அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தில் கடந்த 3-ஆம் தேதி மெஹபூபா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீது நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள ஸ்ரீநகர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்குப் பாஸ்போர்ட் தரமுடியாது என மறுத்துள்ளது.
Passport Office refused to issue my passport based on CID’s report citing it as ‘detrimental to the security of India. This is the level of normalcy achieved in Kashmir since Aug 2019 that an ex Chief Minister holding a passport is a threat to the sovereignty of a mighty nation. pic.twitter.com/3Z2CfDgmJy
— Mehbooba Mufti (@MehboobaMufti) March 29, 2021
“புதிய பாஸ்போர்ட் விநியோகத்துக்காக ஜம்மு காஷ்மீர் சி.ஐ.டிக்கு அவர் கொடுத்த ஆதாரங்கள் அவருக்குச் சாதகமானதாக இல்லை. அதனால் பாஸ்போர்ட் விதிமுறைகள் சட்டம் 1967, பிரிவு 6-இன் கீழ் மெஹபூபா இந்தியாவை விட்டு வெளியேறுவது நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கும் என்கிற அடிப்படையில் அவருக்குப் பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது” என பாஸ்போர்ட் அலுவலகம் தங்களின் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மெஹபூபா முஃப்தியின் தாயார் குல்ஷன் நசீருக்கும் இதே காரணத்தை சொல்லி பாஸ்போர்ட் மறுக்கப்பட்டிருக்கிறது.
மெஹபூபாவின் தந்தை மறைந்த முஃப்தி முகம்மது சய்யித் 2014-ஆம் ஆண்டு தொடங்கி அவர் மறைவுவரை பாஜக கூட்டணியுடனான ஆட்சியில் முதல்வராகப் பதவி வகித்தவர், வி.பி.சிங் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.