"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடன் பிரச்னை காரணமாக ஒட்டு மொத்த குடும்பமே இருந்த இடம் தெரியாமல் போன சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹைதராபாத்தில் கடன் பிரச்னை காரணமாக தாங்கள் பெற்று வளர்த்த குழந்தைகளை அவர்களின் தந்தை, தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை கொலை செய்துவிட்டு, அவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடன் நெருக்கடியால் தத்தளித்த குடும்பம்:
கடன் தொல்லையால் ஒட்டுமொத்த குடும்பமே நிலைதடுமாறி சீரழியும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வு காரணமாக தினசரி செலவுகளை கூட செய்ய முடியாமல் இந்தியாவில் பல குடும்பங்கள் தத்தளித்து வருகின்றன.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடன் பிரச்னை காரணமாக ஒட்டு மொத்த குடும்பமே இருந்த இடம் தெரியாமல் போன சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடனில் தத்தளித்து வந்த சந்திரசேகர் ரெட்டி, கவிதா ஆகியோர் தாங்கள் பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளனர். தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
சந்திரசேகர் ரெட்டி, கவிதா ஆகியோர் விட்டு சென்ற தற்கொலை கடிதத்தில், "வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் என் வாழ்க்கையில் சிரமப்பட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நீரிழிவு, நரம்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளால் நான் அவதிப்பட்டு வருகிறேன்" என குறிப்பிட்டுள்ளனர்.
இறுதியில் நடந்த சோகம்:
கடந்த 2023ஆம் ஆண்டு முதல், சந்திரசேகர் ரெட்டி வேலையின்றி உள்ளார். இதன் காரணமாக, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சந்திரசேகர் ரெட்டி முன்பு ஒரு தனியார் கல்லூரியில் ஜூனியர் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த அவர்களிடம் கையில் பணம் இல்லை. இதனால், சந்திரசேகர் ரெட்டியும் கவிதாவும் மிகக் கொடூரமான செயலில் ஈடுபட்டனர். தங்கள் குழந்தைகளைக் கொன்று தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
100 அவசர தொலைபேசி எண்ணுக்கு வந்த அழைப்பின் பேரில், திங்கள்கிழமை இரவு காவல்துறை அதிகாரிகள், ஹப்சிகுடா பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் அவர்களின் உடல்களைக் கண்டெடுத்தனர். சந்திரசேகர் ரெட்டியும் கவிதாவும் தனித்தனி அறைகளிலும், அவர்களது குழந்தைகள் அவரவர் படுக்கையறைகளிலும் இறந்த நிலையில் காணப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், தம்பதியினர் தங்கள் மகன் 10 வயது மகள் விஸ்வன் ரெட்டி மற்றும் மகள் ஸ்ரீதா ரெட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது" என்றார்.

