சட்டப்படிப்பில் காந்தி பட்டம் பெறவில்லை... அதிர்ச்சி அளித்த ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா..!
அண்ணல் காந்தியடிகள் குறித்து ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் ஐடிஎம் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ராம் மனோகர் லோஹியா நினைவு சொற்பொழிவின்போது அண்ணல் காந்தியடிகள் குறித்து ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டம் பெறாத காந்தி:
காந்தியிடம் ஒரு பல்கலைக்கழக பட்டம் கூட இல்லை. ஆனால், காந்தி சட்டத்தில் பட்டம் பெற்றவர் என படித்தவர்கள் பலர் நம்புகின்றனர். அவர் பட்டம் எதுவும் பெறவில்லை என மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "பட்ட படிப்பை பெறுவதை விட மக்கள் அதிக இலக்கை வைத்திருக்க வேண்டும். காந்தி படிக்கவில்லை என்று யார் சொல்வார்கள்? அதைச் சொல்ல யாருக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், அவர் ஒரு பல்கலைக்கழக பட்டமோ தகுதியோ பெறவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
மகாத்மா காந்தி சட்டப் பட்டம் பெற்றவர் என்று நினைக்கும் பலர் நம்மில் உள்ளனர். இல்லை. அவர் பட்டபடிப்பு பெறவில்லை. அவரது ஒரே தகுதி உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ மட்டுமே. அவர் வழக்கறிஞர் பயிற்சிக்குத் தகுதி பெற்றவர். ஆனால், சட்டப் பட்டம் பெறவில்லை.
மேடையில் இருக்கும் சிலருக்கு நேர்மாறான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நான் உண்மைகளின் அடிப்படையில் பேசுகிறேன். நமது தேச தந்தை எவ்வளவு கல்வி தகுதி பெற்றிருக்கிறார் என்பதை பாருங்கள்" என்றார்.
காந்திக்கு புகழாரம்:
சத்தியத்தின் பாதையில் பயணம் செய்த காந்திக்கு புகழாரம் சூட்டிய அவர், "காந்தி நாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். ஆனால், சாதிக்கப்பட்ட அனைத்திலும் உண்மையே மையமாக இருந்தது.
அவரது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் பார்த்தால், அவரது வாழ்க்கையில் உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை. எத்தனை சவால்கள் வந்தாலும், மகாத்மா காந்தி ஒருபோதும் உண்மையைக் கைவிடவில்லை. மனசாட்சிபடி நடந்தார். இதன் விளைவாக, அவர் தேசத்தின் தந்தை ஆனார்" என்றார்.
பட்டம் பெற்றாரா? இல்லையா?
மகாத்மா காந்தி ஒரு வழக்கறிஞர் மட்டுமல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைவராகவும் காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதியாகவும் நினைவுகூரப்படுகிறார். அவரது அகிம்சை கருத்துகள் உலகம் முழுவதும் பிரபலமானது. மார்ட்டின் லூதர் கிங் உள்பட உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள், காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர்.
போர்பந்தர் நகரில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற காந்தி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (UCL) சேர்ந்து, சட்டப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
உண்மை இப்படியிருக்க, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தெரிவித்த கருத்துகள் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இதை, பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.