தக் லைஃப் , ரெட்ரோ திட்டமிட்டு வீழ்த்தப்பட்டன...எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து
கமல் மற்றும் சூர்யாவின் அரசியல் காரணத்திற்காகவே அவர்களின் படங்கள் தக் லைஃப் மற்றும் ரெட்ரோ திட்டமிட்டு வீழ்த்தப்பட்டன என எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்

தக் லைஃப் படத்தின் தோல்வி திட்டமிட்டு பரப்பப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களின் விளைவு என எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஜெயமோகன் தனது தளத்தில் எழுதியுள்ளார்.
திட்டமிட்டு வீழ்த்தப்பட்டதா தக் லைஃப் ?
கங்குவா, ரெட்ரோ, தக்லைஃப் என பல சினிமாக்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டு வீழ்த்தப்படுகின்றன. முதன்மைக் காரணம் அரசியல். அரசியல் இயக்கங்கள் இன்று இணையத்தில் ஒற்றைப்பெரும் அமைப்பாகத் திரண்டுள்ளன.ஒரு படத்துக்காக அவர்கள் திரளவில்லை, தொடர்ச்சியாக ஆண்டுமுழுக்க ஒற்றைத்தரப்பாக திரண்டு செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். அந்த பெரிய அமைப்பு ஒரு சினிமாவை அழிக்க நினைத்தால் அவர்களுக்கு அது ஒருநாள் வேலைதான்.
அரசியலமைப்புகளின் பிரச்சாரங்களை பொதுமக்கள் நம்புவதில்லை. ஆனால் அரசியலமைப்புகள் சினிமாக்களை வீழ்த்த செயல்படக்கூடும் என இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. ஆகவே இவற்றை பொதுமக்களின் கருத்தாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
தக்லைப் திரையரங்கில் வெளியாகி வெறும் இருபது நிமிடங்கள் ஆவதற்கு முன்னரே மிகக்கடுமையான பலநூறு எதிர்விமர்சனங்கள், டிரோல்கள், வெளியாகிவிட்டன. அனைவருமே படத்தை அமெரிக்காவில் பார்த்தோம், துபாயில் பார்த்தோம் என்று எழுதினார்கள். முதல்காட்சி முடிவதற்குள்ளேயே படம் பற்றிய எதிர்மறை கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் கமல்ஹாசனின் அரசியல்தான். சூரியாவுக்கும் இதே பிரச்சினைதான்.
இதில் பல நடைமுறை நுணுக்கங்கள் உள்ளன. ஒரு தரப்பு படத்தை வீழ்த்த முயன்றால் இன்னொரு தரப்பு தூக்க முயலலாமே என்று கேட்கலாம். அது சாத்தியமே இல்லை. எவரானாலும் ஒரு நுகர்வுப்பொருளைப் பற்றி எதிர்மறைச் சித்திரத்தை மட்டுமே உருவாக்கமுடியும். நேர்நிலைச் சித்திரத்தை உருவாக்க முடியாது. ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் மட்டுமல்ல, தடுப்பு நிலைபாடுகூட எடுக்கமுடியாது. கமல்ஹாசனுக்கும் ரசிகர்படை உண்டு, அரசியல்தரப்பும் உண்டு, அவர்கள் செயலற்றவர்கள். அவர்கள் வேண்டுமென்றால் இன்னொரு படத்தை வீழ்த்தலாம்.
சிறிய படங்களை இப்படி வீழ்த்தமுடியுமா என்றால் அது சாத்தியமல்ல. சிறிய படங்களுக்கு இந்தவகை தாக்குதல்கள் விளம்பரம்தான் ஆகும். பெரிய படங்களை மட்டுமே தாக்கி வீழ்த்தமுடியும். பெரிய படங்கள் ஏற்கனவே பெரிய அளவில் பிரமோ செய்திருப்பார்கள். ஆகவே அனைவரும் அதைக் கவனிப்பார்கள். அந்தக் கவனத்தை அப்படத்தைத் தாக்குபவர்கள் மிக எளிதாக தங்கள்மேல் திருப்பிக்கொள்கிறார்கள்.அதாவது படத்தை தாக்குபவர்கள் அப்படம் அளிக்கும் விளம்பரத்தைப் பயன்படுத்தியே அதை வீழ்த்துகிறார்கள்.
சென்ற சில ஆண்டுகளில் பிரமோவே செய்யப்படாமல் வெளிவந்த படங்கள் சத்தமில்லாமல் தப்பித்துக் கொண்டன. சரி, அப்படியென்றால் பிரமோ செய்யாமலிருக்கலாம் என்றால் மிகப்பெரிய படத்தில் அது பெரிய ‘ரிஸ்க்’. ஏனென்றால் அத்தகைய படங்களுக்கு தொடக்கவிசை மிக முக்கியம்.
மிக அரிதான கதைக்கருவும், மிக வேறுபட்ட திரைக்கதையும் கொண்ட ஒரு படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால் எந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனம் செய்தாலும் எடுபடாது. அதனால் அந்தப்படம் மேலும் ஆதரவைத்தான் பெறும். ஆனால் நூறு இருநூறு கோடி ரூபாய் முதலீடு கொண்ட ஒரு மிகப்பெரிய வணிகப்படத்தை அப்படி எடுக்க முடியாது. அனைவருக்கும் உகந்த படமாக அமையவேண்டும் என்றால் அதற்கு ஒரு சராசரித்தன்மை அவசியம். பொதுவாக கதைக்கரு, கதைக்களம் எல்லாமே கொஞ்சம் அறிமுகமானதாகவே இருக்கவேண்டும். கதைசொல்லும் முறை, நடிப்பு போன்ற சிறிய மாற்றங்களே சாத்தியம் ஹாலிவுட்டின் எந்தப் பெரிய படத்தைப் பார்த்தாலும் இதைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய சுவாரசியமான, நடுத்தரத் தன்மை கொண்ட ஒரு படத்தை எதிர்மறையாகச் சித்தரித்து, கேலி செய்து வீழ்த்திவிட முடியும்.
இந்தியில் தொடர்ச்சியாக படங்கள் இப்படி வீழ்த்தப்பட்டன. அத்தனை நடிகர்களும் அடிபணிந்தனர். அண்மையில் எம்புரானுக்குப்பின் மோகன்லால் காலடியிலேயே விழுந்து விட்டார். இங்கும் அந்த வகையான உச்சகட்ட அழுத்தம்தான் உள்ளது. இங்கும் தாக்குப்பிடிப்பது கடினம் என்பதே என் எண்ணம்.
தக் லைப் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு கேங்ஸ்டர் படம். ஆனால் ஆணவமும் அதன் விளைவான துரோகமும் ஊடாடும் சித்திரத்தை அளிக்கிறது. நீண்ட காலக் கதை. ஆகவே பல இடைவெளிகள் கொண்ட படம். வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சிகளை தொட்டுத்தொட்டு செல்கிறது. கொஞ்சம் கவனமாகப் பார்க்கப்படவேண்டிய படம். ஆனால் அக்கவனத்தை சிதறடித்துவிட்டால் மொத்தமாகவே பார்வையாளனிடமிருந்து அகன்றுவிடக்கூடியது." என அவர் தனது தளத்தில் எழுதியுள்ளார்





















