ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
அதிமுக கூட்டணியில் இணைய தவெகவிற்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரனும் ஆதரவு தெரிவித்துள்ளதால், விஜய் அதை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

அதிமுகவும் தவெகவும் கூட்டணி அமைக்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்காமல் போனது. இந்நிலையில், சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, தங்கள் கூட்டணியில் இணைய தவெக-விற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதால், விஜய் அதை ஏற்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எதிர்பார்ப்புக்கிடையே அமையாமல் போன அதிமுக-தவெக கூட்டணி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து அனைத்து கட்சிகளும் செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அதிமுகவும் தவெகவும் இணைவது குறித்த பரபரப்பாப பேசப்பட்டு, அதற்காக பேச்சுவார்த்தைகளும் இரு தரப்பிலும் நடத்தப்பட்டது.
அதிமுக தரப்பில் விஜய்யின் அநேக நிபந்தனைகள் ஏற்கப்பட்டாலும், எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் உறுதியாக நின்றனர். அந்த ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
அதேபோ தவெக தரப்பில், விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது தெரிந்ததே. 2026-ல் விஜய் தான் முதலமைச்சர் என்றே அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக உடன் இணைந்தால், விஜய் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க முடியாது என்பதால், பேச்சுவார்த்தை இழுபறியிலேயே இருந்தது.
இரு தரப்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எல்லாம் ஏற்கப்பட்டாலும், அந்த ஒரு விஷயத்தில் மட்டுமே இரு கட்சிகளும் விடாப்பிடியாக இருந்ததால், கடைசியில் அதிமுக-தவெக கூட்டணி அமையாமலேயே போனது.
பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுக
இதைத் தொடர்ந்து, பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்தி, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. இதற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு ஆகாத அண்ணாமலையையே, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தூக்கியடித்தது பாஜக. ஏனென்றால், கூட்டணி அமைக்காமல் தமிழ்நாட்டில் பாஜக-வால் எதுவும் செய்ய முடியாது என்பது கட்சியின் தலைமைக்கு நன்றாகவே தெரியும்.
இதற்காகவே, தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு பலத்த போட்டி இருந்த நிலையிலும், அதிமுக உடன் இணக்கமாக இருக்கும் நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக்கியது பாஜக தலைமை. அதன் பின்னர் பேச்சவார்த்தைகள் நடத்தப்பட்டு, அமித் ஷாவே இங்கு வந்து, அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.
இதனிடையே, ரெய்டு மூலம் அதிமுக-வை மிரட்டி பணிய வைத்து கூட்டணி அமைத்ததாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
தவெக-விற்கு மீண்டும் அழைப்பு விடுத்த அதிமுக
என்னதான் பாஜக உடன் கூட்டணி அமைத்தாலும், தமிழ்நாட்டு இளைஞர்கள், பெண்கள் மத்தியில் தவெக-விற்கு வரவேற்பு இருப்பதால், அக்கட்சி கூட்டணிக்கு வந்தால், வெற்றி எளிதாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நம்புவதாக தெரிகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, திமுக-வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் அதிமுக தேர்தலை அணுகுவதாகவும், அதே கருத்துடன் தான் அன்பு சகோதரர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் இருக்கிறார் என தெரிவித்தார்.
மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது, அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று வேறு தெரிவித்துள்ளார் கடம்பூர் ராஜு. இதன் மூலம், தவெக-விற்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்ததாகவே கருதப்படுகிறது.
அதிமுக அழைப்பிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்த பாஜக
இந்நிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், கடம்பூர் ராஜுவின் கருத்தை வரவேற்றுள்ளார். திமுக-வை வீழ்த்துவதுதான் இந்த கூட்டணியின் நோக்கம் என்றும், அதற்காக எல்லோரும் ஒன்றாக சேர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், விஜய்யின் தவெக தங்கள் கூட்டணியில் இணைவதைற்கு அவர்ஆதரவு தெரிவித்துவிட்டதாகவே எடுத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், விஜய் இந்த அழைப்பை ஏற்பாரா என்பதுதான் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் விஜய் உறுதியாக இருந்தால், இந்த கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை. மேலும், தனித்து போட்டியிடுவதையே விஜய் விரும்புவதாகவும் ஏற்கனவே கூறப்பட்டது. இதனால், விஜய் என்ன செய்யப் போகிறார் என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.





















