Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: ராணுவத்திற்கான ஐந்தாவது தலைமுறை போர் விமானத்தை சுயமாக உருவாக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Fifth-Generation Fighter Jet: ராணுவத்திற்கான ஐந்தாவது தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
5வது தலைமுறை போர் விமானம்:
இந்தியாவின் வான்வழிப் போர் திறன்களை வலுப்படுத்தவும், உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்தவும் ஒரு பெரும் முன்னெடுப்பாக, இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் ஜெட் முயற்சியான மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) திட்டத்திற்கான செயல்பாட்டு மாதிரிக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் "இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க உந்துதலாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) திட்ட செயலாக்க மாதிரிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா சொந்தமாக தயாரிப்பது ஏன்?
சீன ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் J-35 ஸ்டெல்த் போர் விமானங்கள், பாகிஸ்தான் ராணுவத்திலும் இணையக்கூடும் என்ற தகவல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனா ஏற்கனவே J-36 மற்றும் J-50 போன்ற ஆறாம் தலைமுறை போர் விமான முன்மாதிரிகளையும் சோதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், அவர்களின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை ஈடுசெய்வதற்கான பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. 42 போர் விமான ஸ்குவாட்ரன்கள் அனுமதிக்கப்பட்டாலும், இந்திய விமானப்படையில் 31 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே உள்ளன. அதிலும் குறைந்தபட்சம் 8 ஸ்குவாட்ரன்கள் அடுத்த 10 ஆண்டுகளில் படையில் இருந்து நீக்கப்படலாம். இந்நிலையில், AMCA திட்டம் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்தியாவின் 5ம் தலைமுறை போர் விமானம் எப்போது வரும்?
ஐந்தாவது தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் இந்தியாவின் திட்டம் கடந்த 2010ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த விமானத்தில் ஒரு உள்நாட்டு கண்டுபிடிப்பான டைவர்ட்லெஸ் சூப்பர்சோனிக் இன்டேக் இருக்கும் எனவும், 25 டன் எடையுள்ள இரட்டை இன்ஜின் ஜெட் விமானமாக ஸ்டெல்த் திறன்களுடன் வடிவமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் கருத்துப்படி இந்த விமானம், நான்கு நீண்ட தூர வான்-வான் ஏவுகணைகள் மற்றும் பல துல்லிய வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகளை சுமந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர 10 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் முன்மாதிரி 2031 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் மற்றும் தொடர் உற்பத்தி 2035 ஆம் ஆண்டுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 முன்மாதிரிகளை உருவாக்க மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
தனியார் பங்களிப்பு
HAL, டாடா, அதானி மற்றும் L&T போன்ற பொது மற்றும் தனியார் இந்திய நிறுவனங்களை ADA விரைவில் சுயாதீனமாகவோ, கூட்டு முயற்சிகளாகவோ அல்லது கூட்டமைப்பாகவோ ஏலங்களை சமர்ப்பிக்க அழைக்க உள்ளது. ஐந்தாவது தலைமுறை ஜெட் விமானத்தை உருவாக்குவதில் ஸ்டெல்ட் வடிவமைப்பு மட்டுமின்றி, உந்துவிசை, மின்னணு போர் மற்றும் மேம்பட்ட நெட்வொர்க்கிங் அமைப்புகளில் புதுமைகளும் அடங்கும். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) LCA தேஜாஸிற்காகவும் எதிர்கால AMCA பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டும் உள்நாட்டு காவேரி இன்ஜினையும் ஒரே நேரத்தில் உருவாக்கி வருகிறது.
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்:
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் எதிரிகளின் கண்களுக்கு புலப்படாமல் செயல்படுவது (ஸ்டெல்த்), சூழலுக்கு ஏற்ப செயல்படுவது, மேம்பட்ட சென்சார்கள் மற்றும் ஒருங்கிணைந்த போர் நெட்வொர்க் திறன்களுக்கு பெயர் பெற்றவை ஆகும். பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி, அத்தகைய விமானங்கள் ஆஃப்டர்பர்னர்களைப் பயன்படுத்தாமல் சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்க முடியும் மற்றும் எதிரி ரேடார் கண்டறிதலைத் தவிர்க்கலாம், இது முந்தைய தலைமுறை ஜெட் விமானங்களிலிருந்து அவற்றை வேறுபடுத்தும் அம்சங்கள் ஆகும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே தற்போது F-22 ராப்டார், F-35 லைட்னிங் II மற்றும் Su-57 போன்ற செயல்பாட்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைக் கொண்டுள்ளன.





















