Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
anna university case: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Anna University Case: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி தான் என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு:
ஞானசேகரன் மீது சுமத்தப்பட்டுள்ள 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். ஞானசேகரனுக்கு கருணை காட்டக்கூடாது எனவும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் ஜுன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஞானசேகரனுக்கான நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது நண்பருடன் இருந்த, 19 வயது பெண்ணை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஞானசேகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 இன் பிரிவுகள் 63(a), 64(1), 75(i)(ii), மற்றும் 75(i)(iii) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (FIR) படி, கோட்டூர்புரத்தில் வசிக்கும் ஞானசேகரன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி, அவரது வீடியோக்களைப் பதிவு செய்து, அவரது அடையாள அட்டையின் புகைப்படங்களை எடுத்தார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வரலாற்று குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது. இதுபோக அவருக்கு பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் அடுத்தடுத்த வழக்குகளில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்:
பெண்ணிடம் அத்துமீறி நடந்தபோது ஞானசேகரன் தொலைபேசி வாயிலாக யாரையோ தொடர்புகொண்டு, ”சார்” என குறிப்பிட்டு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் ஞானசேகரனை தவிர மற்ற யாருக்குமே சம்மந்தம் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக அரசு யாரையோ காப்பாற்ற முயல்கிறது என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக களமாடின. திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதகாவும் குற்றம்சாட்டின. இந்நிலையில் தான், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.





















