Dog Attack: ஐந்து மாத குழந்தையை கடித்தே கொன்ற தெருநாய்.. சென்னையை அடுத்து தெலங்கானாவில் அதிர்ச்சி!
தெலங்கானாவில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Telangana Dog: தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தந்தூர் பகுதியில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. இதனால், அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் அதிர்ச்சி:
பாபுசாய் என்ற அந்த குழந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது, வீட்டில் யாரும் இல்லை. இந்த சமயத்தில், வீட்டில் நுழைந்த நாய், குழந்தையை தாக்கியுள்ளது. குழந்தையின் தந்தை தத்து, தனது மகன் இறந்துவிட்டதைக் கண்டதும் நாயை அடித்து கொன்றுள்ளார்.
சம்பவம் நடக்கும்போது, குழந்தையின் பெற்றோர் வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குழந்தையின் தந்தையான தத்துவின் பணியிடத்தில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாயே இப்படி செய்ததாக சில உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
ஆனால், அந்த நாயின் உரிமையாளர் இதை மறுத்துள்ளார். தெரு நாய் என்றும் விளக்கம் அளித்துள்ளார். செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், கடந்த சில ஆண்டுகளாகவே பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பொது மக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறும் நாய்கள்:
செல்லப்பிராணிகள் மட்டும் இன்றி தெருநாய்களும் ரோட்டில் நடமாடும் மக்களுக்கு தொல்லை தந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டு நாய் கடி சம்பவங்களானது 26.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது.
கடந்த மாதம் தெருநாய்கள் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி, ஹைதராபாத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து கொன்றது.
கடந்த ஏப்ரல் 13ஆம், உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் தெருநாய்கள் தாக்கியதில் நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். 10 நாள்களுக்கு முன்பு, சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை இரண்டு ராட்வெய்லர் நாய்கள் திடீரெனத் தாக்கி கடித்துக் குதறியது.
சிறுமியின் தாயார், நாயிடமிருந்து சிறுமியைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால், அந்த இரண்டு நாய்களும் தாயையும் கடுமையாகக் கடித்திருக்கின்றன.
பொது மக்களின் உயிருக்கு ராட்வெய்லர் போன்ற நாய் வகைகள் பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், இதுபோன்ற நாய் வகைகளை விற்க தடை செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றததில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, மூர்க்கமாக நடந்து கொள்ளும் ஆபத்தான நாய் வகைகளை இனப்பெருக்கம் செய்யவும் வளர்க்கவும் தடை விதித்து மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை உத்தரவிட்டது. ஆனால், முறையான வழிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி, மத்திய அரசின் தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.