இனி அதிரடி தான்... ஒரு விபத்து கூட நடக்க கூடாது ; பக்கா ஸ்கெட்ச் போடும் விழுப்புரம் கலெக்டர்
ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களை சாலையின் நடுவில் நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில், நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும், விபத்துக்கான காரணங்கள் குறித்தும், விபத்து நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆலோசனை மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில், நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும், விபத்துக்கான காரணங்கள் குறித்தும், விபத்து நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறியப்பட்டது.
மேலும், நெடுஞ்சாலைகளில் நடைபெற்றுவரும் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல், பணிகள் நடைபெறுவது தொடர்பாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், 100 மீட்டர் தொலைவிற்குள்ளாகவே சாலைப்பணி நடைபெறுவது தொடர்பான தகவல் பலகைகள் ஏற்படுத்துவதோடு, பணிகள் நடைபெறும் பகுதிகளில் பேரல் மற்றும் பேரிகாட்களில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர் ஒட்டி பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும்.
பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பேருந்துகளை சர்வீஸ் சாலைகளில் வந்து பயணிகளை இறக்கி ஏற்றிய பின்னர் மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும் என போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலை, இதர அனைத்து சாலைகளில், நகர்ப்பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணித்து அவ்வாறு நிறுத்தப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து, மீண்டும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சாலைகளிலும் வேகத்தடை (Speed Breaker) தொலைவில் இருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைய வேண்டும்.
அனைத்து சாலைகளிலும், தகவல் பலகை (Sign Boards), வாகன நிறுத்திட பலகை (Parking Boards) தேவையான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். சந்திப்பு சாலைகளில் (Junction Point) மேம்படுத்திடவும், தேவையான இடங்களில் ஆய்வு செய்து உயர்கோபுர மின் விளக்குகள் (Highmas light) அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திசைகாட்டும் பலகைகளை (Sign Boards) 50 மீட்டருக்கு முன்னரே நிறுவுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களை சாலையின் நடுவில் நிறுத்தக் கூடாது, அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் பயணிகளை ஏற்றக் கூடாது இதனை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து காவல்துறையினர் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் சீட் பெல்ட் அணிந்து வாகன இயக்கிட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விழுப்புரம் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷேஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






















