இபிஎஸ் இதை பண்ணி இருக்கலாமே... புலம்பி தீர்க்கும் ரத்தத்தின் ரத்தங்கள்.. மிஸ் பண்ணிட்டீங்களே
அதிமுக பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கி கூட்டணியை, உறுதி செய்து இருக்கலாம் என குரல்கள் எழுந்துள்ளன.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுகவை பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா மற்றும் பி.வில்சன், ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை முன்னிட்டு, வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவிற்கு 4 உறுப்பினர்களும், அதிமுகவிற்கு 2 உறுப்பினர்களும் கிடைக்கவுள்ளது. அந்த வகையில் திமுக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஒரு இடம் மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் பட்டியல்
அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா
தேமுதிகவிற்கு 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தேமுதிகவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஜி.கே.வாசன் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது எம்.பி பதவியை தேமுதிகவிற்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் அதிமுக தேமுதிகவிற்கான ராஜ்யசபா இடத்தை உறுதி செய்த நிலையிலும், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியை உறுதி செய்யாத வகையில் பேசி இருப்பதும், முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி இருப்பதும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அரசியல் என்பதே தோ்தலுக்கானதுதான். அந்த வகையில், 2026 பேரவைத் தோ்தலை முன்னிட்டுதான் இந்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. அதேபோல் தேமுதிகவும் 2026 பேரவைத் தோ்தலை முன்வைத்தே எங்களுடைய கடமையை ஆற்றுவோம். அடுத்த ஆண்டு ஜன. 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் எங்களது நிலைப்பாடு, கூட்டணி குறித்து அறிவிப்போம்.
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் உயிரிழந்தபோது, முதல்வா் மற்றும் தமிழக அமைச்சா்கள் இறுதிச் சடங்கு முடியும் வரை எங்களுக்கு உறுதுணையாக நின்றதுடன், அவருக்கு அரசு மரியாதை வழங்கியதையெல்லாம் நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என பேசி இருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராஜ்யசபா சீட் உறுதி செய்த பிறகும் கூட்டணியை உறுதி செய்யாமல், பிரேமலதா ஏன் பேசினார் எனவும் அதிமுக தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தனபாலுக்கு ஏன் எம்.பி பதவி ?
செங்கல்பட்டு நகர அதிமுகவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனபாலுக்கு, எம்பி பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட அதிமுகவினர் புலம்பி வருகின்றனர். கட்சியில் பல்வேறு பதவிகளை அனுபவித்தாலும், தனபால் கட்சிக்கு என்று ஒரு ரூபாயை செலவு செய்ததில்லை.
யாரோ ஒருவர் செலவு செய்தால், அங்கு நான்கு புகைப்படங்களை எடுத்து விளம்பரம் தேடுபவர் தான் அவர். ஆனால் கடந்த எம்பி தேர்தலில் செலவு செய்து தோல்வியடைந்த ராஜசேகர், சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் என பலர் இருந்தும் ஏன் அவருக்கு வழங்கினார்கள் என்ற எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என முடிவு செய்திருந்தால், செலவு செய்தவர்களுக்கும் உழைத்தவர்களுக்கும் வழங்கி இருக்க வேண்டும் என குமுறுகின்றனர்.
கூட்டணியை உறுதிப்படுத்தி இருக்கலாமே ?
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தற்போது உறுதியாகியுள்ள நிலையில், வடதமிழ்நாட்டில் பாமகவின் வாக்கு வங்கி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் சேலம், தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான இடங்களை வென்றோம். வட தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் கடுமையான போட்டியை திமுகவிற்கு கொடுத்தோம்.
இந்த முறை இந்த கூட்டணியில் பாமக வந்தால் வடதமிழ்நாட்டில், மிகப்பெரிய வெற்றியை அதிமுகவால் கொடுக்க முடியும். அன்புமணி ராமதாஸின் எம்.பி பதவி காலம் முடிந்துள்ளது. அவரது பதவியை மீண்டும் அவரிடமே கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்திருந்தால் குறைந்த தொகுதியில் 2026-இல் பாமகவை வளைத்து போட்டு இருக்கலாம். குறிப்பாக அன்புமணிக்கு பதவி கொடுத்திருந்தால், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது நயினார் நாகேந்திரன், இபிஎஸ் மற்றும் அன்புமணி என மூவரும் ஒரே நேரத்தில் தோன்றியிருப்பார்கள். இதன் மூலம் கூட்டணியையும் எளிதாக உறுதிப்படுத்தி இருக்கலாம். இந்த வாய்ப்பை ஏன், தலைமை தவறவிட்டது என புலம்பி வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.





















