Budget Session 2022: நீட் விலக்கு மசோதா: நாடாளுமன்றத்தில் தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கம்
Budget Session 2022: நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
நாட்டின் 2022-2023ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
இந்த நிலையில், இந்தக்கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு(NEET Exam) எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பினர். இதனால், அவையில் சற்று நேரம் சலசலப்ப ஏற்பட்டது.
முன்னதாக, மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மத்திய அரசின் சார்பில் நீவட் எனப்படும் நுழைவுத்தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்விற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க. மட்டும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவர் இதுவரை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பவில்லை.
அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் நேரில் சந்தித்தும் இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும், அவர் இதுவரை அந்த மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாத காரணத்தால் தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இன்று நாடாளுமன்றத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியுள்ளனர். நடப்பாண்டில் சட்டசபை கூட்டத்தின்போதும், தமிழக ஆளுநர் உரையை வாசித்தபோது அவர் நீட் விலக்கு மசோதா மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : PM Modi Press Meet: நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு தயார் - பிரதமர் மோடி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்