Covid 19: அச்சுறுத்தும் கொரோனா; கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.!
Covid 19 Prevention Measures: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
Covid 19 Prevention Measures: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் மருத்துவமனைகள், கிளினிக் மற்றும் மருந்தகங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது
கொரோனா நிலவரம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்றைய தினம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்தது. நேற்று 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. . இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது.
இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,42,72,256 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,230 ல் இருந்து 5,31,258 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,286 லிருந்து 66,170ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்நிலையில் தான், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களை சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ரா, ஹரியானா, கர்நாடகா, டெல்லி ஆகிய 8 மாநிலங்களில் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”நாட்டில் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் கொரோனா கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். கவனக்குறைவாக இருக்க வேண்டாம். நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக மாவட்ட வாரியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்து.
மேலும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். அதிக கூட்டம் உள்ள இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.