யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு எனவும் மத்திய அமைச்சருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இல்ல எனக்கு புரியல. நாம கட்டிய வரிப்பணத்தை கேட்கிறோம். இதுல அரசியல் செய்ய என்ன இருக்கு? தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம். மாணவர்களுக்காக வரவேண்டிய கல்வித் தொகையை கேட்டிருக்கிறோம். இந்த வருஷம் மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சொல்கிறார்கள்.
மும்மொழிக்கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம். தமிழர்களின் உரிமைதான் மொழி உரிமை. கல்வி உரிமை. மொழிக்காக பலர் உயிர் தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. யார் அரசியல் செய்கிறார்கள் என நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக புதிய கல்வி கொள்கையை ஏற்க வைப்பதில் மத்திய கல்வி அமைச்சர் விடாப்பிடியாக இருக்கிறார். மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதிலிருந்து தமிழகத்தில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ஒரு காலமும் மும்மொழிக்கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது எனவும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன.
திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. மும்மொழிக்கொள்கையை ஏற்க முடியாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கே கடிதம் எழுதிவிட்டார். ஆனாலும் அவர்கள் விட்ட பாடில்லை. தமிழக முதலமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில் கல்வி அமைச்சர் “புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 8ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கற்றலை உறுதி செய்யும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. அறிவியல் கல்வியை அடிப்படையாகக் கொண்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை எதிர்ப்பதால், தமிழ்நாடு அரசு ரூ.2,500 கோடியை அல்ல, 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாக, பொறுப்புள்ள பதவியில் இருப்போர் பரப்பக் கூடாது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலங்கள், மத்திய அரசின் நிதியை முழுமையாகப் பெறுகின்றன.
மாணவர் நலனுக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரிப்பது பிற்போக்குத்தனமானது. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் கூட்டாட்சிக்கு எதிரானதாக உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில், ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியைத் திணிப்பது என்பதே கிடையாது. தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வியை அரசியல் ஆக்கக்கூடாது. அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி உயர வேண்டும் என்றும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.






















