Highcourt : "இது காதல்; காமம் இல்ல" : சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் சொன்ன அதிர்ச்சி கருத்து..
Minor Girl Rape : 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைதான 26 வயது இளைஞருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை.
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைதான 26 வயது இளைஞருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை.13 வயது சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிதின் தாபேராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் 26 வயதான நிதின். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். 2020ஆம் ஆண்டு, 13 வயது சிறுமி புத்தகம் வாங்கி வருவதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்றிருக்கிறார். ஆனால், அதற்கு பிறகு சிறுமி வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனை அடுத்து, சிறுமி காணாமல் போனதாக தந்தை புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கண்டுபிடித்ததோடு, வெளியே அழைத்து சென்ற இளைஞர் நிதினை கைது செய்தனர்.
இளைஞருக்கு ஜாமீன்:
வாக்குமூலத்தில், "விருப்பப்பட்டுத்தான் நிதினுடன் சென்றதாகவும், நிதினை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து இருப்பதாகவும், எனவே தான் வீட்டில் இருந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றதாகவும்" சிறுமி கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் நிதின். இது மனுவை விசாரித்த நீதிபதி ஜோஷி பால்கே, நிதினுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி சொன்னது என்ன?
இந்த வழக்கு குறித்து நீதிபதி கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 13 வயது ஆகுகிறது. இதனால், அவரது ஒப்புதலை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றம்சாட்டப்பட்ட நபருடன் காதலில் இருந்ததை சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார். சிறுமிக்கு கொடுத்த வாக்குமூலத்திலும் குற்றம்சாட்டப்பட்டவருடன் பல நாட்களாக ஒன்றாக தங்கி இருந்ததாக கூறியிருக்கிறார்.
Sexual relationship was out of love not lust: Bombay High Court allows bail to man booked for raping minor
— Bar & Bench (@barandbench) January 12, 2024
report by @NarsiBenwal https://t.co/fzeaBe7iTs
கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதாக எந்த இடத்திலும் சிறுமி கூறவில்லை. எனவே, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பாலியல் உறவு, காதலால் நிகழ்ந்தவையே தவிர, காமம் காரணமாக இல்லை" என்று நீதிபதி ஜோஷி பால்கே தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2012ஆம் ஆண்டு, போக்சோ சட்டத்தில், சிறார்கள் பாலியல் உறவு கொள்ள அனுமதிக்கும் வயது 16-இல் இருந்து 18-ஆக உயர்த்தப்பட்டது. இதனால், 16 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டாலும் அது குற்றமாக கருதப்பட்டு வருகிறது.
இருப்பினும், சில சில சமயங்களில், சிறார்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர் புகார் அளிக்கும்பட்சத்தில், முழு சம்மதத்துடன்தான் குற்றம்சாட்டப்பட்டவருடன் பாலியல் உறவு கொண்டதாக சிறுமிகள் பெரும்பாலான நேரங்களில் வாக்குமூலம் அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க