(Source: ECI/ABP News/ABP Majha)
India Bloc Virtual Meeting: I.N.D.I.A. கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு.. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?
India Bloc Virtual Metting: I.N.D.I.A., கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், இன்று காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்றது.
India Bloc Virtual Metting: I.N.D.I.A., கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
I.N.D.I.A., கூட்டணி ஆலோசனை:
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்த பாஜகவை, வீழ்த்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கான தேசிய மற்றும் மாநில கட்சிகள் அடங்கிய I.N.D.I.A எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் ஏற்கனவே 4 முறை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்தி கூட்டணியின் இலக்கு என்ன, எப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டு பாஜகவை வீழ்த்துவது என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
I.N.D.I.A., கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்?
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். சுமார் 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜகவிற்கு எதிரான வாக்குக்ளை ஒன்று சேர்ப்பது, கூட்டணிக்குள் தொகுதிகளை பங்கிட்டு கொள்வது மற்றும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதோடு, கூட்டணிக்கான தலைவர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களையும் அரவணத்துச் செல்லும் வகையிலான ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கிப்பட்டது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க, அவரது கட்சி சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், தலைவர் பதவி என்பது இன்றி கார்கே கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மம்தா பங்கேற்கமாட்டார்..!
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முக்கிய நபராக கருதப்படும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி இன்றைய கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ஆலோசனை தொடர்பாக முதலமைச்சருக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இதனால் எதிர்கால இந்திய கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று அர்த்தப்படுத்துவதில்லை. “ என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் இடதுசார்களுடன் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதை மம்தா பானர்ஜி ஏற்கனவே நிராகரித்தாலும், காங்கிரசுக்கு சொற்பமான தொகுதிகளை ஒதுக்க முன் வந்துள்ளது. ஆனால், மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைமை இதனை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுதிகளை பங்கிடுவதில் தொடரும் சிக்கல்:
மேகாலயா மற்றும் அஸ்ஸாமில் சமமான இடங்களை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் காங்கிரஸின் கோரிக்கையை பரிசீலிக்க தயாராக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. மறுபுறம்,
கோவா மற்றும் குஜராத்தில் தலா ஒரு இடத்திலும், ஹரியானாவில் மூன்று இடங்களிலும் இடமளிக்க வேண்டும் என, காங்கிரசிடம் ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் அதன் மாநிலக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலையில் உள்ளன, அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிகள் உடனான பேச்சுகள் நிச்சயமாக உள்ளன. பீகாரிலும் தொகுதிப்பங்கீட்டில் கடும் இழுபறி இருக்கும் என கருதப்படுகிறது.