Ayodhya Ram Temple: பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் - மூத்த தலைவர் அத்வானி பாராட்டு..
அயோத்தி ராமர் கோயிலை கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலை கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் இருக்கும் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 22 ஆம் தேதி கோயில் திறப்பு விழாவிற்காக மக்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முன்னாள் துணைப் பிரதமரான அத்வானி, குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேசத்தின் அயோத்தி வரை ரத யாத்திரையை முன்னின்று நடத்தினார். அவருத்து துணையாக நின்றவர் முரளி மனோகர் ஜோஷி. அதுமட்டும் இன்றி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் சம்பவ இடத்தில்தான் இருந்தனர்.
இருப்பினும் 96 வயது நிரம்பிய அத்வானி இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொள்வாரா என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. எனினும் அத்வானி பங்கேற்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக விஷ்வ பரிஷத் அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அத்வானியை பாஜக புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அயோத்தியில் கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது, “ ரத யாத்திரை நடக்கும் போது பல ஊர்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் மக்கள் என்னை காண வருவார்கள். பலரும் கண்ணீர் மல்க பேசி பகவான் ராமரை போற்றுவார்கள். அந்த தருணத்தில் தான் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. இந்த நாட்டில் பலரும் ராமர் கோயில் கட்ட வேண்டும் என நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. ஜனவரி 22 ஆம் தேதி பல கோடி மக்களின் கனவு நினைவாகும் நாள்.
கடந்த 1990 செப்டம்பர், 25-ம் தேதி குஜராத்தின் சோம்நாத் பகுதியில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு ராம ரத யாத்திரை மேற்கொண்டோம். பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது அவர் இன்று இருப்பது போல பிரபலமானவர் அல்ல. ஆனால், அப்போதே அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார். அது தான் தற்போது வடிவம் கண்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.