3ஆவது குழந்தையை பெற்றுக்கொண்டால் பரிசு.. ஆண் குழந்தைனா ஜாக்பாட்தான்.. இது நல்லா இருக்கே!
மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொண்டால் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெலுங்கு தேசம் எம்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆண் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு மாடு பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி வரும் நிலையில், மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொண்டால் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அவரது கட்சி எம்பி ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆண் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு மாடு பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எம்.பி. வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு:
தென் மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. அதற்கு, நேர்மாறாக வட மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் மக்களவையில் தென் மாநிலங்களின் பலம் வெகுவாக குறையும் என அஞ்சப்படுகிறது. இதனால், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கினார். இதே மாதிரியான கருத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.
மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் பரிசு:
இந்த நிலையில், மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொண்டால் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. அப்பலா நாயுடு அறிவித்துள்ளார். ஆண் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு மாடு பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தனது சம்பளத்திலிருந்து ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
அப்பலா நாயுடுவின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விஜயநகரத்தில் உள்ள ராஜீவ் விளையாட்டு வளாகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் எம்.பி. இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் இந்த அறிவிப்பு தொடர்பான தகவலை பகிர்ந்து வருகின்றனர். இது ஒரு புரட்சிகர அறிவிப்பு என தெலுங்கு தேசம் கட்சியினர் பாராட்டி வருகின்றனர். இந்தச் சலுகையை அறிவித்ததற்காக எம்.பி. அப்பலா நாயுடுவை முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.
எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொண்டாலும் பிரசவ நேரத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார்.

