Women Warriors: நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்த பெண் தலைவர்கள்
ஆங்கிலேயர்களை கண்டு அஞ்சாது, துணிந்து எதிர்த்த பெண் போராட்ட தலைவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
வேலு நாச்சியார்:
தனது கணவரை கொன்றவர்களை பழி வாங்கி, சிவகங்கையை மீட்காமல் ஓய மாட்டேன் என வேலுநாச்சியார், நெருப்பு கனலாய் துடித்து கொண்டிருந்தார். 1772 ஆம் ஆண்டு, படைத்தளபதி மருது சகோதரர்கள் மற்றும் தளவாய் தாண்டவராயனின் வேண்டுகோளுக்கு ஏற்ப சில காலங்கள் தலைமறைவாகிறார். தலைமறைவான காலங்களில் போர் தொடர்பான பயிற்சிகளை,மக்களுக்கு அளித்தும், பல குறுநில மன்னர்களின் உதவியையும் பெறுகிறார். அப்போது வேலு நாச்சியாரின் உருது மொழியில் தெளிவான பேச்சையும், போர் குணத்தையும் கண்டு ஹைதர் அலி ஆச்சரியம் கொள்கிறார். உடனே படைகளை அனுப்புவதாக சம்மதம் தெரிவிக்கிறார். 1780 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக வேலு நாச்சியார் போர் அறிவிக்கிறார்.
வேலு நாச்சியாருக்கு , மருது சகோதரர்கள், சில குறுநில மன்னர்களின் ஆதரவுகளும் மற்றும் ஹைதர் அலியின் மைசூர் படைகளும் சேர்ந்து, ஆங்கிலேய படைகளை தாக்கினர். அப்போது பெண்கள் படை தளபதியாக இருந்த குயிலி, மனித ஆயுதமாக மாறி, ஆங்கிலேய ஆயுத கிடங்கை அழித்தார். பின்னர் ஆட்சியை தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரிடம் ஒப்படைத்து விட்டு 1796 ஆம் ஆண்டு மறைந்து விடுகிறார். வேலு நாச்சியாரை கௌரவித்து, 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி மத்திய அரசு தபால் தலை வெளியிட்டது.
சரோஜினி நாயுடு:
கவிக் குயில் என அழைக்கப்படும் சரோஜினி நாயுடு,1879 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் வங்காளத்தில் பிறந்தார்.சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், கவிஞராகவும் எழுத்தாளராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார். 12 வயதில், சென்னை பல்கலைக்கழகத்தில் மெட்ரிக் குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அந்த தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
1905 ஆம் ஆண்டு வங்காளத்தை, ஆங்கிலேயர்கள் இரண்டாக பிரித்ததை எதிர்த்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட சரோஜினி நாயுடு, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் , உப்புச் சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டார். உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் காந்தி தண்டி கடற்கரையில் எடுக்கப்பட்ட உப்பை சரோஜினி நாயுடுவின் கையில் கொடுத்தார். அந்த போராட்டத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, சில மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக 21 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் கிடைத்த பின் உத்தரபிரதேசத்தின் ஆளுநராக பொறுப்பேற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் பெற்றார். அவரை போற்றும் வகையில், அவரின் பிறந்த நாள் இந்தியாவின் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அன்னி பெசண்ட்:
இந்திய மண்ணில் பிறந்து, இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெண்மணிகளை நமக்கு தெரியும். ஆனால் அந்நிய மண்ணில் பிறந்து, இந்தியர்களின் விடுதலைக்காக போராடிய பெண்ணை தெரியுமா?. அவர்தான் அன்னி பெசண்ட் அம்மையார். அயர்லாந்து நாட்டில் பிறந்த அவர், கணவருடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக தனித்து வாழ்ந்து வருகிறார். பின்னர் 1889 ஆம் ஆண்டு பிரம்ம ஞான சபையின் உறுப்பினரானார். 1893 ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்த அன்னி பெசண்ட் , சென்னை அடையாறில் பிரம்மஞான சபையின் தலைமை நிலையத்தை நிறுவினார்.
இந்தியர்கள் மீதான ஆங்கிலேய அடக்குமுறைகள் குறித்து, காமன் வீல் என்னும் பத்திரிகையில் விரிவாக இந்தியர்களுக்கு ஆதரவாக எழுதினார். 1914 ஆம் ஆண்டு சென்னையில் நியூ இந்தியா என்ற நாளேடை ஆரம்பித்து, ஆங்கிலேய அடக்குமுறைகள் குறித்து எழுதினார். சுயாட்சி இயக்கத்தை ஆரம்பித்து நாடு முழுவதும் பயணித்து, விடுதலை இயக்கத்தை வலுபெறச் செய்தார். இதை கண்ட ஆங்கிலேய அரசு அன்னிபெசன்ட்டை, 1917 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது . இதையடுத்து அன்னிபெசன்ட்டை விடுதலை செய்யவில்லையென்றால் சத்தியாகிரகம் நடத்தப்போவதாக , காங்கிரஸ் இயக்கமும் , முஸ்லிம் லீக்கும் அறிவித்தன. இதனால் நிலைகுலைந்த ஆங்கிலேய அரசு, உடனே அவரை விடுதலை செய்தது. இந்தியாவில் மட்டுமன்றி , பிரித்தானியாவுக்கும் பயணம் மேற்கொண்டு,இந்தியர்களின் விடுதலைக்கு ஆதரவாக பரபரப்புரை மேற்கொண்டார். 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி 87-ஆம் வயதில் சென்னை அடையாறில் காலமானார். சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபை, இன்றும் அவரின் நினைவாக சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
ஜான்சி ராணி:
உத்திரபிரதேசம் வாரணாசியில் 1828ம் ஆண்டு மௌரிய பந்தர் - பகீரதிபாய் என்ற தம்பதியருக்கு பிறந்தவர் மணிகர்ணிகா. சிறுவயதிலேயே தனது தாயை இழந்த மணிகர்ணிகா சிறுவயது முதலே வால் வீச்சு, குதிரை ஏற்றம், என பல்வேறு சாகசங்களை கற்று ஆண்களுக்கு இணையாக வளர்ந்து வந்தார். இப்படி வீரமாக வளரும் மணிகர்ணிகாவுக்கு 1842ம் ஆண்டு அப்போதைய ஜான்சி மன்னர் கங்காதர ராவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மணிகர்ணிகா ஜான்சி ராணி என்றும், ராணி லட்சுமி பாய் என்றும் அழைக்கப்படுகிறார்
திருமணமான சில வருடங்களில் ராணி லட்சுமி பாய் தனது மகனை இழக்கிறார். மகன் இறந்த சோகத்தில் மன்னன் கங்காதர் ராவும் உயிரிழக்கிறார். மகன்,கணவரை இழந்து துயரத்தில் மூழ்கினாலும் மனம் தளராத ஜான்சி ராணி, அவரே அரசு பொறுப்பேற்று ஆட்சி செய்தார். ஆங்கிலேயர்களின் இடையூறுகள் எல்லாம் தகர்த்து விடப்பிடியாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
ஆனால் ஆங்கிலேயருக்கு ஜான்சி ராணியால் அச்சுறுத்தல் இருக்குமோ என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் அவர் மீது பொய் வழக்கு சுமத்தி கைது செய்யவும் முயற்சி செய்தனர். எதற்கும் பணியாத ராணி லட்சுமி பாய் ஆங்கிலேயர்களை துணிச்சலாக எதிர்த்து நின்றார். இதையடுத்து 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியில், தனது படையை முன்னின்று நடத்தி போர் புரிந்தார். இப்போரில் படுகாயமடைந்து வீரமரணமடைந்தார். ஜான்சி ராணி குறித்து, ஆங்கிலேய படையை வழிநடத்திய ஹீரோஸ் கூறுகையில், ஜான்சி ராணி மிகவும் ஆபத்தானவர் என்றும் விவேகம் மற்றும் வீர குணம் கொண்டவர் என்று புகழ்ந்து கூறினார். இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று ஏற்பட்ட கிளர்ச்சியில் ஜான்சி ராணியின் பங்கும் முக்கியமானது.