தனது சொத்தை விற்று பழங்குடிகளுக்கு வீடுகள் கட்டி தந்த சமூக செயற்பாட்டாளர் ; ஒரு நெகிழ்ச்சி கதை!
15 குடும்பங்களை மட்டுமே கொண்ட கண்டிவழி குக்கிராமத்தில், சாலை, தண்ணீர், மின்சாரம் ஆகிய வசதிகள் இருந்த போதும், வீடுகள் மோசமான நிலையில் காணப்பட்டன.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதியில் ஆணைக்கட்டி பகுதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆணைக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வனப்பகுதிகளை ஒட்டி ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இதில் நெ 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவழி என்ற பகுதியில் சுமார் 80 இருளர் பழங்குடிகள் வசித்து வருகின்றனர். 15 குடும்பங்களை மட்டுமே கொண்ட இந்த குக்கிராமத்தில், சாலை, தண்ணீர், மின்சாரம் ஆகிய வசதிகள் இருந்த போதும், வீடுகள் மோசமான நிலையில் காணப்பட்டன. அரசு சார்பில் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அக்கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழை நீர் ஒழுகியதால், இரவு நேரங்களில் உறங்க முடியாமல் தவித்து வந்தனர்.
கண்டிவழி கிராம பழங்குடி மக்களுக்கு நல்ல தரமான வீடுகள் என்பது கனவாக இருந்து வந்தது. இந்நிலையில் ஜோஸ்வா என்ற பழங்குடிகள் நல செயற்பாட்டாளர், அந்த கனவை நனவாக்கி உள்ளார். அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, முதற்கட்டமாக 5 வீடுகள் கட்டப்பட்டன. அரசு அளித்த நிதி போதுமானதாக இல்லை என்பதால், பல தன்னார்வ அமைப்பினர்களிடம் ஜோஸ்வா நிதியுதவி கேட்டுள்ளார். போதிய நிதியுதவி கிடைக்காத நிலையில், தனது சொத்தை விற்று வந்த பாகத்தை முழுவதுமாக வீடுகள் கட்ட வழங்கினார். அதோடு மட்டுமின்றி அதே கிராமத்தில் தங்கியிருந்து வீடுகள் கட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதன் பயனாக 5 பழங்குடி குடும்பங்களுக்கு கடந்த 2019 ம் ஆண்டில் வீடுகள் கிடைத்தது.
பின்னர் மற்ற பழங்குடி குடும்பங்களும் தங்களுக்கும் வீடுகள் கட்டித்தர உதவ வேண்டுமென ஜோஸ்வாவிடம் வலியுறுத்தி உள்ளனர். இதன் பேரில் இரண்டாவது கட்டமாக 7 வீடுகள் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்றன. தமிழ்நாடு அரசு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், அந்த நிதியை உயர்த்தி தர மாவட்ட ஆட்சியரிடம் ஜோஸ்வா கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று அப்போது மாவட்ட ஆட்சியராக ராசாமணி 3 இலட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். அந்த நிதியும் போதுமான இல்லாத நிலையில், கொரோனா பேரிடருக்கு பின்னர் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், தன்னார்வலர்களின் நிதியுதவி கிடைக்காததாலும் சுமார் 15 மாதங்கள் வீடுகளின் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன், தன்னார்வ அமைப்புகளின் நிதியுதவி கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து புராபெல் என்ற நிறுவனம் ஒரு வீட்டிற்கு தலா 2 இலட்ச ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கியது. இதனால் மீண்டும் வேகமெடுத்த கட்டுமான பணிகள் முழுமையாக முடிவுற்றது. பணிகள் முடிவுற்ற 6 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புராபெல் வித்யா செந்தில்குமார் , ராக் நிறுன தலைவர் பாலசுந்தரம், மருத்துவர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்ட வீடுகளுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகை பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்ட வீடுகளுக்கு முதலமைச்சரின் புகைப்படமோ, பெயரோ கூட இடம் பெறாத கல்வெட்டு பதிக்கப்பட்டு இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து கண்டிவழி கிராமத்தை சேர்ந்த கடலான் என்பவர் கூறுகையில், ”பல ஆண்டுகள் வீடுகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம். தொகுப்பு வீடுகளில் மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகியதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தோம். ஜோஸ்வா மிகவும் கஷ்டப்பட்டு எங்கெங்கோ அலைந்து அரசு மற்றும் தனியார் உதவியுடன் வீடு கட்டி தந்துள்ளார். தற்போது கட்டப்பட்டு வீடு நன்றாக உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான ஜோஸ்வாவிற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பழங்குடிகள் நல செயற்பாட்டாளர் ஜோஸ்வா கூறுகையில், “கண்டிவழி இருளர் பழங்குடியின கிராமத்தில் வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். அவர்களுக்கு நண்பர்கள் மற்றும் அரசின் உதவியோடு 5 வீடுகள் கட்டித்தந்தோம். அதற்கு போதிய நிதி இல்லாத நிலையில் குடும்ப சொத்தை விற்பனை செய்ததில் எனக்கு பாகமாக வந்த பணம் முழுவதையும் வீடுகள் கட்ட கொடுத்தேன். பின்னர் 7 வீடுகள் கட்ட ஏற்பாடுகள் நடந்தன. இந்த வீடுகளை கட்ட மாவட்ட ஆட்சியர்களாக இருந்த ராசாமணி மற்றும் சமீரன் ஆகியோர் உதவி செய்தனர். பிராபெல், ராக், மருத்துவர் மகேஷ்வரன் உள்ளிட்டோரின் நிதியுதவியால் தற்போது கட்டி முடிக்கப்பட்ட 6 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு வீடும் முழுமையாக கட்டி தரப்படும்” எனத் தெரிவித்தார்.