மேற்கு மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சலுகை அளித்த 7 காவலர்கள் பணியிடை நீக்கம், விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வழக்கு விசாரணை உள்ளிட்ட முக்கிய பத்து செய்திகள் இதோ...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வசந்த குமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி விட்டு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி உறவினர்களை சந்தித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், பிரபு, வேல்குமார், ராஜ்குமார்,நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா உத்தரவு.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை வருகின்ற 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேருக்கும் விடுபட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை இன்று கோவை நீதிமன்றத்தில் நடக்கிறது. கோவை விமானப்படை கல்லூரியில் பயிற்சிக்காக வந்த 28 வயது பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக அமிதேஷ் ஹர்முக் என்ற சக அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க அனுமதி கோரி கோவை மகளிர் காவல் துறையினர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
கோவையில் நேற்று மீண்டும் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளன. நேற்று முன் தினம் 127 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்று 141 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 6 ஆவது மெகா தடுப்பூசி முகாம் வருகின்ற 23 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில் இதற்காக 1,429 முகாம்கள் அமைக்க திட்டம்
கோவை – திருச்சி சாலை மேம்பால பணிகளுக்காக பழைய சுங்கம் ஏரிமேடு பகுதியில் 32 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. மேம்பால கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாலாங்குளம் புறவழிச் சாலையில் இறங்கு தளம் அமைக்கும் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
கோவை மாவட்டத்தில் காணாமல் போன 141 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஒப்படைத்தார். செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக 341 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், செல்போன்கள் தொலைந்து போனால் டிஜிகாப் என்ற செயலி மூலம் புகார் அளிக்கலாம் எனவும் செல்வநாகரத்தினம் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு வார காலம் பள்ளி மூடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விவசாய நிலங்களில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.