12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: பன்னிரெண்டம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, ஆங்கில தேர்வை இமாச்சல பிரதேச அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

12th Public Exam: பன்னிரெண்டம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு ரத்து:
வினாத்தாள் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், நடப்பாண்டு பொதுத்தேர்வில் திட்டமிடப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை ரத்து செய்வதாக இமாச்சலப் பிரதேச பள்ளிக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சம்பா மாவட்டம், சௌரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விதிமீறலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு ஆசிரியர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்களுக்கு பதிலாக 12 ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் இருந்த பேக்கை தவறுதலாகத் திறந்ததை தொடர்ந்து தேர்வு ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு அட்டவணையில் 10 ஆம் வகுப்புக்கான ஆங்கிலத் தேர்வு மார்ச் 7 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கான ஆங்கிலத் தேர்வு மார்ச் 8 ஆம் தேதியும் திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு சொல்வது என்ன?
12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாள் திட்டமிடப்பட்ட தேதி மற்றும் நேரத்திற்கு முன்பே, மர்ச் 7ம் தேதியே திறக்கப்பட்டதாகக் கூறி ஒரு பெயர் குறிப்பிடப்படாத புகார் வந்ததாக வாரியம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Himachal Pradesh Board of School Education cancelled the Class 12 English examination for the March 2025 session across all examination centres in the state due to the possibility of a paper leak. pic.twitter.com/ThceQuuHWb
— ANI (@ANI) March 8, 2025
இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு, வாரியம் வினாத்தாள் கசிவு விஷயத்தை விசாரித்து, 'தேர்வு மித்ரா செயலி'யிலிருந்து வீடியோ ஆதாரங்களைப் பயன்படுத்தி கூற்றைச் சரிபார்த்தது. இந்தத் தேர்வின் போது வாரியத்தால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, தேர்வு பாதுகாப்பைக் கண்காணித்து மேம்படுத்துகிறது.
அரசு சொல்வது என்ன?
வெளியாகியுள்ள தகவல்களின்படி, இமாச்சலப் பிரதேச பள்ளிக் கல்வி வாரிய செயலாளர் விஷால் சர்மா வெள்ளிக்கிழமை இந்த விஷயத்தை தீவிரமாகக் கருதுவதாகக் கூறினார். இமாச்சலப் பிரதேச பள்ளிக் கல்வித் தேர்வு விதிமுறைகள், 1993 (ஜூலை 2017 வரை திருத்தப்பட்டது) பிரிவு 2.1.2 இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, வாரியத்தின் தலைவர் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்ட அனைத்து தேர்வு மையங்களிலும் 12 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மேற்படி தேர்வு நடத்துவதற்கான புதிய தேதி உரிய நேரத்தில் தனித்தனியாக அறிவிக்கப்படும்.





















