IND Vs NZ Final: இந்தியா Vs நியூசிலாந்து - ஃபைனலுக்கான துபாய் மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பு? ரிசர்வ் டே இருக்கா?
IND Vs NZ CT 2025 Final: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் போட்டிக்கான மைதானம் எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

IND Vs NZ CT 2025 Final: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி, துபார் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வென்று ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை கைப்பற்றுமா? அல்லது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு நியூசிலாந்து அணி ஷாக் அளிக்குமா? என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கான ஆடுகளம் எப்படி அமைய இருக்கிறது என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஆடுகளம் எப்படி இருக்கும்?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஃபைனலுக்கான ஆடுகளம், முந்தைய நான்கு லீக் போட்டிகளுக்கு அமைந்தது போன்று, முற்றிலும் புதியதாக இருக்காது என கூறப்படுகிறது. அதன்படி, பாதியளவு மட்டுமே புதியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளமே, இறுதிப்போட்டிக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், நமது சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தனர்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான துபாய் மைதானத்தின் ஆடுகளம் பெரும்பாலும் மெதுவாகவும் வறண்டதாகவும் இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் இருக்கும். இறுதிப் போட்டிக்கான ஆடுகளமும் அதே சூழலில் இருக்கும் என கருதப்படுகிறது. இது இந்தியாவிற்கு சாதகமாக அமையலாம்.
வானிலை எப்படி?
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. லேசான காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிப் போட்டி பிரகாசமான மற்றும் வெயில் நிறைந்த நாளில் நடைபெறவே அதிக வாய்ப்புள்ளது. அதன்படி, போட்டி தொடங்கும் போது வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியஸ் (93.2 டிகிரி பாரன்ஹீட்) ஆக இருக்கும், மேலும் மாலையில் 28 டிகிரி செல்சியஸ் (82.4F) ஆகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் டே உள்ளதா?
ஒருவேளை மழை அல்லது ஏதேனும் சிக்கல்கள் காரணமாக, நாளை போட்டியை நடத்த முடியவில்லை என்றால், ஐசிசி விதிகளின்படி இறுதிப்போட்டிக்கு என ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 10ம் தேதி போட்டி நடைபெறும். ஒருவேளை ரிசர்வ் டேயிலும் போட்டி நடைபெறாவிட்டால், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படலாம்.
பரிசுத்தொகை எவ்வளவு?
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின் மொத்த பரிசுத் தொகை $6.9 மில்லியன் ஆகும். இது 2017 ஆம் ஆண்டு நடந்த கடைசி எடிஷனுக்கான பரிசுத்தொகையை விட 53 சதவீதம் அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்களும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்படும்.




















