"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த அழைப்பு குறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமா பதில் அளித்துள்ளார்.

பள்ளிக்காலத்தில் தானும் முருகனை வழிபட்டு பக்தனாக இருந்திருக்கிறேன் என்றும் முருக பக்தர் மாநாட்டை நடத்தக்கூடாது என தான் சொன்னவில்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"நானும் முருக பக்தன்தான்"
முருகர் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது குறித்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "வந்தவர்களை மரியாதை நிமித்தமாக வரவேற்று சந்தித்தோம். முருக பக்தர் மாநாட்டை நடத்தக்கூடாது என நான் சொல்ல முடியாது. ஆனால், நானும் பள்ளிக்காலத்தில் முருகனை வழிபட்டு பக்தனாக இருந்திருக்கிறேன்.
முருகனை வழிபடுவதற்கான கோரிக்கைகளை கேட்டேன். சொன்னார்கள். நட்பு அடிப்படையில், மரியாதை நிமித்தம் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது" என்றார்.
தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என்பதுதான் நம்முடைய வரலாறு. அதற்கு நேர் மாறாக மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் முயற்சியில் ஆர்எஸ்எஸ், சங்க பரிவார் அமைப்புகள் ஈடுபடுகிறார்கள்.
என்ன சொன்னார் திருமா?
தமிழ்நாட்டில் எந்த மதத்திலும் முரண்பாடுகள் இல்லை. சகோதர வாஞ்சையோடு அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் வாழ்ந்த நிலையில் இங்கே மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேட சங் பரிவார அமைப்புகள் முயற்சிக்கின்றன. அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் பிரச்னை.
அந்தப் பகுதியை சார்ந்தவர்களோ, அந்த வழிபாட்டுக்கு வருகிற பக்தர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லவில்லை. அப்படி ஒரு முரண்பாடு இல்லாத போது சங் பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கே முரண்பாடுகளை உருவாக்கும் முயற்சிக்கிறார். இதனை மதுரை பகுதியை சேர்ந்த மக்கள் செய்யும் சூது சூழ்ச்சிக்கும் பழியாக மாட்டார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என வைகை செல்வன் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமா, "நட்பின் அடிப்படையில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது.
வைகைச் செல்வன் உடனான சந்திப்பு:
விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அப்போதுதான் அவருடன் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் திருச்சியில் நாங்கள் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடத்திய சூழலில் நாங்கள் தங்கியிருந்த அறையில் எனக்கு புத்தகத்தை பரிசளித்தார் அவ்வளவுதான்.
விடுதலைப் போரில் சீர்காழி என்கிற புத்தகம் அவர் வழங்கினார். அரசியல் எதுவும் பேசாமல் பலர் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பு. அவர் இலக்கிய தரத்தில் என்ன செய்து வருகிறார் என்பதை என்னிடத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். நானும் அரசியல் பேசவில்லை. அவரும் அரசியல் பேசவில்லை. அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என்றார்.
ஆட்சியில் பங்கு விசிக முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு, "அது அதற்கு ஆதரவான சூழல் இல்லை. சங் பரிவார் அமைப்புகள் அதிமுகவுடன் சேர்ந்து வலிமை பெற முயற்சிக்கிற சூழலில் அதனை முறியடிக்க வேண்டும் என்பதில்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
2015-16 காலகட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற பெயரில் கருத்தரங்கத்தில் நாங்கள் ஒருங்கிணைத்தோம். அப்போது நான் இந்த கருத்தை பேசிய போது பலரும் அதை நகைப்புக்குரியதாக பார்த்தார்கள். இன்றைக்கு அதை எல்லோரும் பேசுகிறார்கள்.
அன்றே அனைவரும் கை கொடுத்திருந்தால் வலு கூடி இருக்கும். இப்போது அவர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள். அந்த கருத்தில் நாங்கள் மாறுபடவில்லை. உடன்படுகிறோம். கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்கிற நிலைப்பாடு கிடையாது. ஆனால், அந்த கோரிக்கை வைக்கின்ற சூழல் கனியவில்லை" என்றார்.




















