CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
CRIME: தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வீடியோவை காட்டி திருமணத்தை நிறுத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்சிசியை ஏற்படுத்தியுள்ளது.

CRIME: மீரட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக, போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை:
பெண்களை கொண்டாடும் விதமாகவும், போற்றும் விதமாகவும் இன்று, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களோ, சாதி மற்றும் சமூக கட்டமைப்பின் அடிப்படையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு இன்னும் நிரந்தர தீர்வு கண்டபாடில்லை. அந்த வகையில் தான் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அரங்கேறிய கொடூர சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்து, திருமணத்தை நிறுத்தி, ஊரைவிட்டே போக செய்ததோடு, தற்போது பணம் கேட்டும் மிரட்டும் நபரின் கோர செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடந்தது என்ன?
மீரட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை கடந்த 2023ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம், உயர்சாதியை சேர்ந்த ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பிரச்னையாக வெடித்ததும், அந்த ஊர் பஞ்சாயத்து பெண் குடும்பத்தை காவல்துறையை அணுகாமல் தடுத்துள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே எங்கும் சொல்லக்கூடாது, வழக்கும் பதிவு செய்யக்கூடாது என கூறி, 2.5 லட்ச ரூபாய் பணமும் அளித்து பிரச்னையை முடித்து வைத்ததாக ஊர் பஞ்சாயத்து நினைத்துள்ளது. ஆனால், அந்த இளம்பெண்ணுக்கான கொடுமைகள் அத்துடன் முடியவில்லை என்பதே உண்மை.
வீடியோவை பகிர்ந்து மிரட்டல்
சமூக துன்புறுத்தல் மற்றும் இழி பேச்சுகளில் இருந்து விடுபடும் நோக்கில், அந்த இளம்பெண்ணின் குடும்பம் அந்த ஊரைவிட்டே வெளியேறியுள்ளது. மேலும், பெற்றோர் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளும் செய்துள்ளனர். அந்த நிலையில் தான், பாலியல் வன்கொடுமை செய்த நபர், சம்பவம் தொடர்பான வீடியோவை பெண்ணின் வருங்கால கணவருக்கு சமூக வலைதளம் மூலம் பகிர்ந்துள்ளார். இதனைதொடர்ந்து, அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, பஞ்சாயத்து மூலமாக எங்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும் எனவும், குற்றம்சாட்டப்பட்ட நபர் மிரட்ட தொடங்கியுள்ளார்.
போலீசாரிடம் தஞ்சமடைந்த குடும்பம்:
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாங்க முடியாமல், ஹாப்பூர் எஸ்பி குன்வர் ஞானஞ்சய் சிங்கைச் சந்தித்து புகார் அளித்தார். குற்றம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பெண்ணின் தந்தை கூறியதாவது: "என் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு, ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டு, 2.5 லட்ச ரூபாய்க்கு பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் கிராமத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றோம். சமீபத்தில் என் குழந்தையின் திருமணத்தை ஒரு ஆணுடன் ஏற்பாடு செய்தேன். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் அவளுடைய வருங்கால கணவரிடம் ஒரு ஆபாச வீடியோவை அனுப்பினார். அவளுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டது. இப்போது நாம் என்ன செய்வது?" என மனமுடைந்து பேசினார்.
வீடு புகுந்து தாக்குதல்:
தொடர்ந்து பேசுகையில், "அவர்கள் எங்களிடம் பணத்தைத் திரும்பக் கேட்டு வந்து எங்களுடன் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினர். என் மனைவி அவர்களை எதிர்த்தபோது, அவர் தாக்கப்பட்டார். அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டன" என்று பெண்ணின் தந்தை குமுறினார்.
இதுதொடர்பாக பேசிய போலீசார், “முதல் சம்பவம் குறித்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இப்போது, எழுத்துப்பூர்வ புகார் பெறப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து ஐந்து ஆண்கள் மீது ஐபிசி பிரிவுகள் 376 (கற்பழிப்பு), 354 (தாக்குதல் அல்லது குற்றவியல் படை) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.





















