Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: அமெரிக்காவிற்கான வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump On India: அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரி பிரச்னை:
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதில் இருந்தே டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அந்நாட்டு பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு, அதே அளவிலான வரியை விதித்து வருகிறார். குறிப்பாக இந்தியா தங்கள் நாட்டு பொருட்கள் மீது, மற்ற நாடுகளை காட்டிலும் அதிகப்படியான வரியை விதிப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி உடனான நேரடி சந்திப்பின்போதும், இருநாட்டு தலைவர்களும் விரிவாக விவாதித்து இருந்தனர்.
வரியை குறைத்த இந்தியா:
இந்நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “.இந்தியா எங்களிடம் அதிகப்படியான வரிகளை வசூலிக்கிறது. மிகவும் அதிகப்படியானது. இந்தியாவில் எதையும் விற்கக்கூட முடியாத அளவில் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆம், அவர்கள் இப்போது தங்கள் வரிகளை மிகவும் குறைக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் யாரோ ஒருவர் அவர்கள் செய்த செயல்களை அம்பலப்படுத்துகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார். அதாவது, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு அதிகப்படியான வரி விதிக்கிறது என்பதை, தான் அம்பலப்படுத்தியதாக ட்ரம்ப் விளக்கியுள்ளார்.
புதிய வரி விதிப்பு நடைமுறை
ஏப்ரல் 2 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் கனடா, சீனா, மெக்சிகோ மற்றும் இந்தியா மீதான வரி அச்சுறுத்தலை நியாயப்படுத்திய டிரம்ப், "நமது நாட்டிடம் இருந்து அனைவராலும் வரி பறிக்கப்பட்டது, அது இப்போது நின்றுவிடுகிறது. எனது முதல் பதவிக்காலத்தில் நான் அதை நிறுத்தினேன். அது மிகவும் நியாயமற்றதாக இருந்ததால் இப்போது அதை நிறுத்தப் போகிறோம். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், நிதிக் கண்ணோட்டத்தில் மற்றும் வர்த்தகக் கண்ணோட்டத்தில், நமது நாடு உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டாலும் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது" என்றார்.
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், சுங்கவரி மற்றும் சுங்கவரி அல்லாத தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும், விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் முயல்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்பின் கருத்து வந்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள், பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தத்தை உறுதி செய்வதிலும், பொருட்கள் மற்றும் சேவைகளில் இருவழி வர்த்தகத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல துறைகளை உள்ளடக்கிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களை இரு அரசாங்கங்களும் முன்னெடுத்து வருகின்றன. BTA மூலம், பொருட்கள் மற்றும் சேவைகள் துறையில் இந்தியா-அமெரிக்கா இருவழி வர்த்தகத்தை வலுப்படுத்துவதும் ஆழப்படுத்துவதும், சந்தை அணுகலை அதிகரிப்பதும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளைக் குறைப்பதும், இரு நாடுகளுக்கும் இடையே விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதும் எங்கள் நோக்கமாகும்" என இந்தியா தெரிவித்துள்ளது.





















