IND vs ENG: கம்பீரமும் இல்லை.. கர்ஜனையும் இல்லை! இங்கிலாந்தில் என்ன செய்யப்போகிறது இந்தியா?
விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் இல்லாத இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி சமாளிக்கப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் குறைவான அணிகளில் இந்தியா முதன்மையான அணியாக திகழ்கிறது. இந்திய அணிக்கு சவால் தரும் அளவில் பலமிகுந்த அணியாகவும் இங்கிலாந்து உள்ளது.
ரோகித், கோலி இல்லாத இந்தியா:
இந்த நிலையில், இந்த முறை இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு சவாலை எதிர்கொள்ள உள்ளது. முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட அணியாகவே இங்கிலாந்திற்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. இவர்களில் நிரம்ப அனுபவம் கொண்டவர்களாக கே.எல்.ராகுல், பும்ரா மற்றும் ஜடேஜா மட்டுமே உள்ளனர்.
இந்திய அணியை சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு தாங்கிப் பிடித்த விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் அதுவும் இங்கிலாந்து மண்ணில் ஆடுகிறது. விராட் கோலி மட்டுமின்றி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அணி மிகப்பெரிய பின்னடைவில் உள்ளது.
ஹிட்மேன்:

ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சமீபகாலமாக பெரியளவில் ஆடாவிட்டாலும், அவர் களத்தில் நீடித்துவிட்டால் டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல மாற்றிவிடுவார் என்பது நாம் அறிந்ததே. ரோகித் சர்மா இங்கிலாந்து மண்ணில் 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 2 அரைசதத்துடன் 524 ரன்களை எடுத்துள்ளார்.
அரசனின் அரியாசனம் காலி:
விராட் கோலி களத்தில் நின்றால் எதிரணிக்கு மிகப்பெரிய சவால் இருக்கும் என்பது மட்டுமின்றி போட்டியை முழுக்க முழுக்க இந்திய அணிக்கு சாதகமாக கொண்டு வந்துவிடுவார். விராட் கோலிக்கு மிகவும் பிடித்த அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1991 ரன்களை குவித்துள்ளார். அதில் 5 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 235 ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் எட்ஜ்பாஸ்டனில் சதம் விளாசியுள்ளார். ஓவல், ஹெடிங்லே மைதானத்தில் அரைசதம் விளாசியுள்ளார். விராட் கோலி எப்போதும் இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பனமாகவும் சவாலாகவுமே திகழ்ந்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் மட்டும் 31 இன்னிங்சில் பேட் செய்து 1033 ரன்களை குவித்துள்ளார். அதில் 2 சதங்கள், 5 அரைசதங்கள் அடங்கும். விராட் கோலி இல்லாமல் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது அவமானம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்சே கூறியதன் மூலம் அவரது மகத்துவத்தை நாம் அறியலாம்.
ஓய்ந்த சுழல் அலை:
அதேபோல, இந்திய அணிக்கு மற்றொரு பேரிழப்பு அஸ்வின் இல்லாதது ஆகும். ஆல்ரவுண்டர் அஸ்வின் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய அஸ்வின் இங்கிலாந்திற்கு எதிராக மட்டும் 24 டெஸ்ட் போட்டிகளில் 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 8 முறை 5 விக்கெட்டுகளும், 1 முறை 10 விக்கெட்டுகளும் அடங்கும். இங்கிலாந்து மண்ணில் 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் சிறந்த எகானமியை கொண்டுள்ளார்.

கம்பீரமும், கர்ஜனையும் இல்லாத இந்தியா:
இந்திய அணியின் கம்பீரமும், கர்ஜனையுமாக திகழ்ந்த இவர்கள் 3 பேரும் இல்லாமல் முதன்முறையாக இங்கிலாந்திற்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி என்ன செய்யப்போகிறது? என்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. கம்பீர் - கில் கூட்டணி என்ன செய்யப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



















