Trump Vs Putin: “நீ முதல்ல உன் முதுக பாரு“; புதினுக்கு ட்ரம்ப் கொடுத்த நக்கலான பதில் - எதுக்கு தெரியுமா.?
ரஷ்ய அதிபர் புதினின் ஆஃபர் ஒன்றை நிராகரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவருக்கு நக்கலான ஒரு பதிலையும் அளித்துள்ளார். புதினின் ஆஃபர் என்ன.? ட்ரம்ப்பின் பதில் என்ன.? பார்க்கலாம்.

இஸ்ரேல் ஈரான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மத்தியஸ்தம் செய்ய ரஷ்ய அதிபர் புதின் முன்வந்துள்ளார். ஆனால் அதை நிராகரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவருக்கு நக்கலான பதில் ஒன்றையும் அளித்துள்ளார். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இஸ்ரேல்-ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்ய முன்வந்த புதின்
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், அவ்விரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். இஸ்ரேல் மற்றும் ஈரானுடன் ரஷ்யாவிற்கு நல்லுறவு இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே தாங்கள் மத்தியஸ்தம் செய்வது சரியாகவும், எளிதாகவும் இருக்கும் என புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய புதின், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்பும் நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேலிடம் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த முன்மொழிவை தான் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
யார் மீதும் எதுவும் திணிக்கப்படவில்லை என்றும், போர் சூழலில் இருந்து வெளியே வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மட்டுமே பேசுவதாகவும் புதின் கூறினார். ஆனால், முடிவுகள் அந்தந்த நாட்டிடமே உள்ளன எனவும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், இந்த சூழலுக்கான ஒரு நல்ல தீர்வை எட்ட முடியும் என்று தான் கருதுவதாகவும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
புதினுக்கு ட்ரம்ப் அளித்த நக்கலான பதில் என்ன.?
இஸ்ரேல், ஈரான் இடையேயான போரில் மத்தியஸ்தம் செய்ய புதின் விரும்புவது குறித்து கடந்த வார இறுதியிலேயே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் அவர் பேசியுள்ளார். ஆனால், உடனடியாக அதற்கு பதிலளிக்காத அவர், பின்னர் ரஷ்யா இந்த விவகாரத்திற்குள் நுழைவதை விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.
புதினுடன் பேசியது குறித்து தற்போது கூறியுள்ள ட்ரம்ப், புதினிடம் “எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், முதலில் உங்கள் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்யுங்கள், ரஷ்யாவிற்காக முதலில் மத்தியஸ்தம் செய்வோம், இந்த விவகாரம் குறித்து நீங்கள் பிறகு கவலைப்படலாம்“ என்று தெரிவித்ததாக நினைவுகூர்ந்துள்ளார்.
ஆனால், ட்ரம்ப்பும் இந்த விஷயத்தில் தனது முந்தைய கருத்துடன் மாறுபட்டுள்ளார். ஏனென்றால், முன்னதாக, மத்திய கிழக்கில் ரஷ்யா மத்தியஸ்தம் செய்வதற்கு ஆட்சேபம் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், புதினிடம் பேசும் போது, உங்கள் மீது உள்ள அழுக்கை முதலில் பாருங்கள் என்பது போல் கூறி, அவரை நக்கலடித்து, அவரது மத்தியஸ்த விருப்பத்தை நிராகரித்துள்ளார் ட்ரம்ப்.
ஒரு வேளை, ஒட்டுமொத்த உலகிற்கே, தான் தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார் போல.!!





















