நீங்கள் இருக்கும் இடங்களில் பாசிட்டிவ் எனர்ஜியை ஏற்ற வேண்டுமா? உங்களுக்காக 9 செடிகள்… பிடித்ததை வைத்துப் பாருங்கள்!
சில செடிகளை பார்க்கும்போது நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. நல்ல உடல்நலம், செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவை பெருக இது போன்ற செடிகளை வீட்டிற்குள் அல்லது அலுவலகத்தில் வைக்கலாம்.

வைப்-தாங்க முக்கியம்… நம்மை சுற்றி என்ன வைப்ரேஷன் இருக்கிறது என்பதை, சுற்றியுள்ள பொருட்களும் நிர்ணயிக்கின்றன. அவற்றை நமக்கேற்றார்போல் மாற்றியமைத்து கொள்வது சுலபம். அதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை இந்த உட்புற செடிகள். தாவரங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் புத்துணர்ச்சியுடன், இனிமையான சூழலாக மாறுகின்றன. வீடுகளில் தோட்டங்களை உருவாக்க விரும்பும் பலர் உள்ளனர். ஆனால் பொதுவாக தாவரங்களுக்கு போதுமான தண்ணீர் மற்றும் சூரிய ஒளியை வழங்குவது முக்கியம். ஆனால் வீட்டிற்குள்ளே வைத்து வளர்க்கக்கூடிய, சூரிய ஒளி தேவைப்படாத சில தாவரங்களும் உள்ளன. அவை வீட்டிற்குள் எளிதில் உயிர்வாழ்பவை ஆகும். இந்த தாவரங்கள் அவற்றின் வேர்களிலிருந்து ஊட்டச்சத்தை பெறுகின்றன. இதுவே அவைகளை சூரிய ஒளி இல்லாமல் வாழ வைக்க உதவுகிறது. அதோடு இதில் சில செடிகளை பார்க்கும்போது நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. நல்ல உடல்நலம், செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவை பெருக இது போன்ற செடிகளை வீட்டிற்குள் அல்லது அலுவலகத்தில் வைக்கலாம்.
மான்ஸ்டெரா டெலிசியோசா
பெரிய, இதய வடிவிலான இலைகள் கொண்ட இதனை அனைவரும் விரும்புகின்றனர். இந்த தாவரங்கள் வைத்திருப்பவர்களுக்கு திருமண வாழ்க்கை கைகூடுவதாக கூறப்படுகிறது. இதனை சாதாரணமாக வீட்டிற்குள் கிடைக்கும் வெளிச்சத்தில், லேசாக தண்ணீர் ஊற்றி வளர்க்க முடியும்.
மணி ப்ளான்ட்
மணி ப்ளான்ட், வைத்திருப்பவர்களுக்கு பாசிட்டிவ் ஆற்றலையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டிற்குள் உள்ள ஒளியில் செழித்து வளரக்கூடிய செடிதான் இது, இதற்கு அடிக்கடி நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. மேலும் இந்த செடியின் இருப்பு மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிலோடென்ட்ரான் கிரீன்
விரைவாக வளரும் இந்த கொடிகள் குறைந்த பராமரிப்பிலேயே செழித்து வளர்கின்றன. மென்மையான, இதய வடிவிலான இலைகள் திருமண வாழ்விற்கு வழுவகுப்பதாக நம்பப்படுகிறது.
பொத்தோஸ்
போத்தோஸ் செடிகள் சிறந்த காற்று சுத்திகரிப்பான்களாக செயல்படுகின்றன. சமையலறை அலமாரி அல்லது குளியலறை போன்ற உங்கள் வீட்டின் மூலைகளுக்கு ஏற்ற செடி இது. அவற்றின் மென்மையான, வட்டமான இலைகள் உங்கள் இடம் முழுவதும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஜேட் செடி
ஜேட் தாவரங்கள் வட்டமான இலைகளை கொண்டுள்ளதால், அதிர்ஷ்டத்தை தரும் செடியாக உள்ளன. வெயில் பகுதியில் செழித்து வளரும் பண்பைக் கொண்டிருப்பதால், குறைந்த நீர் பராமரிப்பு இருந்தால் போதும். வெயில் படரும் பிரகாசமான ஜன்னல்களில் வைத்தால் நன்றாக வளரும்.
கலாதியா செடி
இவற்றின் வண்ணமும் கோடுகள் கொண்ட இலைகளும் பலரால் விரும்பப்படுகிறது. இருப்பினும் மற்றவற்றை விட இதற்கு அதிக பராமரிப்பு தேவை. வறட்சியில் எளிதில் வாடிவிடும் குணம் கொண்டது. ஆனால் நன்றாக பார்த்துக்கொண்டால் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. இவை சுற்றி இருக்கும் காற்றை சுத்திகரிக்கும் சிறந்த செடியாகவும் அறியப்படுகிறது.
அதிர்ஷ்ட மூங்கில் செடி (Lucky Bamboo Plant)
இந்த விரைவாக வளரும் அதிர்ஷ்ட மூங்கில் செடி பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்து, நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. அலுவலகங்களை அலங்கரிக்க சிறந்த தேர்வாகும். குறைந்த ஒளியில் செழித்து வளரும்.
ஸ்னேக் பிளான்ட் (Sansevieria trifasciata)
ஸ்னேக் பிளான்ட்கள் மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்றாகும். இவற்றின் இலைகள் பாம்புகளின் தோலைப் போல இருப்பதால் ஸ்னேக் பிளான்ட் எனப் பெயரிடப்பட்டது. இவை எல்லா வகையான ஒளியிலும் வளரும். ஆனால் எளிதில் அழுகக்கூடியவை, எனவே அதிகம் தண்ணீர் ஊற்றாமல் அவ்வபோது ஊற்றினால் போதும். மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தது.
ரப்பர் ட்ரீ செடி
ரப்பர் ட்ரீ செடியின் தடிமனான, பளபளப்பான இலைகள் மற்றும் ஊதா நிற கோடுகள் பலரை ஈர்க்கின்றன. இதனை வளர்க்க மண்ணை எப்போதுமே ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

