Hardik Pandya: "பச்சோந்தி தோத்துறும் பா" ஹர்திக் பாண்ட்யாவின் பேச்சு - ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்
Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தை பாராட்டிய ஹர்திக் பாண்ட்யாவிற்கு கடும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தொடர்பான ஹர்திக் பாண்ட்யாவின் கருத்துக்கு, நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மும்பை அணியின் முதல் வெற்றி:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைச் சந்தித்தது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முனைப்பில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி, நேற்று நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை எதிர்கொண்டது. இதில் அறிமுக வீரரான அஸ்வனி குமாரின் அட்டகாசமான பந்துவீச்சால் கொல்கத்தா அணி, 116 ரன்களுக்கே சுருண்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கி மும்பை அணி, 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அறிமுக வீரரனா அஸ்வனி குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார். முன்னதாக சென்னைக்கு எதிரான லீக் போட்டியில், மும்பை அணியின் மற்றொரு அறிமுக வீரரான விக்னேஷ் புதூரும் தனது சுழற்பந்து வீச்சால் கவனம் ஈர்த்தார்.
மும்பை அணியை பாராட்டிய ஹர்திக்
இந்நிலையில் கொல்கத்தா அணி உடனான போட்டி முடிவுக்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்ட்யா, “மும்பை அணியின் ஸ்கவுட் (தேர்வுக்குழு) மூலம் தான் இந்த வெற்றி சாத்தியமானது. தேர்வுக்குழுவினர் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, இந்த திறமை வாய்ந்த இளம் வீரர்களை கண்டறிந்துள்ளனர்” என பாராட்டி பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியானதுமே, ஹர்திக் பாண்ட்யாவின் வறுகளை உடனடியாக சுட்டிக்காட்டிய ரசிகர்கள், அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கினர். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் மும்பை குறித்து பேசியதையும் நினைவுபடுத்தினர்.
மும்பையை விமர்சித்த ஹர்திக்
கடந்த 2022ம் ஆண்டு குஜராத் அணியின் கேப்டனாக இருந்தபோது நேர்காணல் ஒன்றில் பேசிய ஹர்திக், “ஐபிஎல் வரலாற்றில் இரண்டு வகையான வெற்றிகரமான அணிகள் உள்ளன. ஒன்று, ஏலத்தின் போது சிறந்த நபர்களை தேர்வு செய்வது. மும்பை அதை தான் செய்கிறது என்று என்று நான் நம்புகிறேன். அல்லது வெற்றி பெற சிறந்த சூழலை உருவாக்குவது - இது சென்னை அணி வகையைச் சேர்ந்தது. அங்கு வீரர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடமிருந்து சிறந்ததைப் பெறுவீர்கள். அது எனக்கு மிகவும் உத்வேகமாக இருந்தது” என பேசினார். அதாவது, மும்பை அணி லீக்கில் இருந்து சிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்து போட்டிகளில் வெல்கிறது. அதே நேரத்தில் சிஎஸ்கே அணி தங்கள் அமைப்பின் மூலம் சிறந்த வீரர்களை உருவாக்கும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது என பேசியிருந்தார். ஆனால், தற்போது அதற்கு நேர் எதிராக மும்பை அணியின் ஸ்கவுட்டை பாராட்டியுள்ளார். இதனை குறிப்பிட்டே ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவை சாடி வருகின்றனர்.
மும்பை அணியும்.. இளம் வீரர்களும்..
இளம் வீரர்களை அடையாளம் கண்டு நட்சத்திரங்களாக மெருகேற்றுவது என்பதை மும்பை அணி பன்னெடுங்காலமாக செய்து வருகிறது. உதாரணமாக ஹார்திக் மற்றும் அவரது சகோதரர் க்ருணால் இருவரும் MI ஸ்கவுட் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர். அதோடு, இன்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, ரமண்தீப் சிங் மற்றும் திலக் வர்மா போன்ற வீரர்கள் அனைவரும் மும்பை அணியாள் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தாம். ஹார்திக் தனத் கருத்தை மாற்றினாலும், மும்பை அணியின் ஸ்கவுட்டிங் அமைப்பு அவர்களுக்கு தொடர்ந்து பலனளித்து வருகிறது, பெரிய அரங்கில் அதன் மதிப்பை நிரூபித்து கொண்டே உள்ளது.




















