என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
இந்தி திணிப்பு விவகாரம் தென் மாநிலங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தென் இந்தியாவை சேர்ந்த ஒருவரை தலைவராக்க ஆர்.எஸ்.எஸ். விருப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பெண் ஒருவருக்கு தலைவர் பதவி அளிக்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புவதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார் என்ற கேள்விக்கு பல மாதங்களாக விடை தெரியாமல் உள்ள நிலையில், அதற்கான பதில் இந்த மாத இறுதிக்குள் தெரிந்துவிடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த உடன் பாஜகவின் புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பிராசஸ் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், நாக்பூர் சென்ற பிரதமர் மோடி, இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் பேசியதாக பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அடுத்த பாஜக தலைவருக்கான ரேசில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைவர் பதவிக்கான ரேசில் தமிழ்நாட்டு பெண்:
பாஜகவின் தேசிய தலைவராக உள்ள ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜகவின் செயல் தலைவராக பதவியேற்ற ஜெ.பி. நட்டா, கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம் வரை அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் கடந்த 10 மாதங்களாக புதிய தலைவரை தேர்வு செய்வது காலதாமதமாகி வந்தது. கட்சி விதிகளின்படி, உள்கட்சி தேர்தல் நடத்தி முடித்துடன்தான் பாஜகவின் புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய முடியும்.
இதற்காக, எல்லா மாநிலங்களிலிலும் பாஜகவின் உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவின் மாநில தலைவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தலைவர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டுவிடும்.
ஆர்.எஸ்.எஸ் விருப்பம் என்ன?
இதையடுத்து, இந்த மாத இறுதிக்குள் பாஜகவின் தேசிய தலைவர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒப்புதலை பெற்றே பாஜக தேசிய தலைவர் அறிவிக்கப்படுவார்.
அந்த வகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவை பெற்று தேசிய தலைவருக்கான ரேசில் தமிழ்நாட்டை சேர்ந்த நநிர்மலா சீதாராமனும் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரை தவிர, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், கிஷன் ரெட்டி, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயரும் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தி திணிப்பு விவகாரம் தென் மாநிலங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தென் இந்தியாவை சேர்ந்த ஒருவரை தலைவராக்க ஆர்.எஸ்.எஸ். விருப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பெண் ஒருவருக்கு தலைவர் பதவி அளிக்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புவதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.





















