CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
IPL 2025 CSK vs RCB: ஐபிஎல் தொடரி இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

IPL 2025 CSK vs RCB: சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2025
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிய, பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 7 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, லக்னோ, பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நாங்கு இடங்களை பிடித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், தொடரின் 8வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி Vs கோலி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் ஜாம்பவான்களாக கருதப்படும் கோலி மற்றும் தோனி இடம்பெற்றுள்ள அணிகள் மோதும் போட்டி என்பதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
16 வருட ஏக்கம்
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூரு அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போடிட்யில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றின் முதல் எடிஷனான 2008ம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டியில் பெற்ற வெற்றிக்கும் பிறகு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெங்களூரு அணி மீண்டும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி அணி
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால், ஆர்சிபி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உருவானது. பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்களை குவித்தது. சேஸ் செய்த சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை சேர்த்தது. இறுதி ஓவரில் கூடுதலாக 16 ரன்களை சேர்க்காமல் தடுத்தாலே, ரன் ரேட் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்று விடலாம் என்ற சூழலில் பெங்களூரு இருந்தது.
ஆனால், தோனி களத்தில் இருந்ததால் சென்னை அணி எளிதில் கடைசி ஓவரில் 17 ரன்களை கடந்து பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல் முதல் பந்திலேயே தோனி பிரமாண்ட சிக்சர் விளாசி அசத்தினார். ஆனால், அந்த பந்து மைதானத்தை விட்டே வெளியே சென்றதால், புதிய பந்தினை வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது பந்துவீச்சாளருக்கு சாதகமாக அமைய, அடுத்த பந்திலேயே தோனி ஆட்டமிழந்தார். இதனால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற, பெங்களூரு பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த போட்டியின் முடிவு சென்னை மற்றும் பெங்களூரு ரசிகர்களிடையே தீரா பகையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேப்பாக்கம் மைதானம் எப்படி?
சென்னை சேப்பாக்கம் மைதானம் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும் சமீபத்திய ஆண்டுகளில், இது மிகவும் மெதுவாகவும், இரு வேகத்திலும், குறைந்த ஸ்கோர் கொண்ட பக்கமாகவும் உள்ளது. 2024 எடிஷனில் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சுமார் 170 ஆக இருந்தது. சேஸ் செய்வது வெற்றியை எளிதாக்க வாய்ப்பளிக்கும். சென்னையில் இன்றைய வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்க வேண்டிய வீரர்கள்:
பெங்களூரு அணியில் கோலி, சால்ட், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர்களாக உள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அசத்திய நூர் அகமது,கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் போட்டியின் போக்கை மாற்றக்கூடிய வீரர்களாக உள்ளனர்.
உத்தேச பிளேயிங் லெவன்:
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.
பெங்களூரு : விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.




















