America Vs Canada: எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வரும் நிலையில், ட்ரம்ப் நேற்று விடுத்த ஒரு பதிவால், அமெரிக்க உறவையே முறித்துக்கொள்ள கனடா துணிந்துவிட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு வரிகளை விதித்து, வர்த்தகப் போரை தொடங்கினார். அதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு, அமெரிக்காவின் அண்டை நாடான கனடா. இந்நிலையில், நேற்று ட்ரம்ப் விடுத்த ஒரு செய்தியால், அமெரிக்கா உடனான பழைய உறவை முறித்துக்கொள்வதாக கனடா அறிவித்துள்ளது.
பதவியேற்ற உடன் கனடாவிற்கு வரிகளை போட்டுத்தாக்கிய ட்ரம்ப்
இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில், கனடா, மெக்சிகோ நாடுகள், அமெரிக்காவில் சட்விரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒரு மாத காலத்திற்கு வரி விதிப்பை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த சூழலில், அந்த ஒரு மாத கால அவகாசம் முடிந்த நிலையில், கடந்த 3-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 25 சதவீத வரி விதிப்பு, 4-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். அதன்படி, தற்போது வரி விதிப்பு அமலில் உள்ளது.
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த கனடா
இந்த நிலையில், அமெரிக்கா விதித்த வரிக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு 2 கட்டமாக வரி விதிப்பை அறிவித்தது. அமெரிக்க அரசின் வரிவிதிப்பு அமலுக்கு வந்த அதே நேரத்தில், கனடா அமெரிக்கா மீது விதித்த 25 சதவீத வரியும் அமலுக்கு வந்தது.
மொத்தமாக, அமெரிக்காவின் 155 பில்லியன் டாலர்கள் அளவிற்கான பொருட்கள் மீது வரி விதிக்க முடிவு செய்து, முதற்கட்டமாக 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரி விதிப்பை அமல்படுத்தியது கனடா. மீதமுள்ள 125 பில்லியன் டாலர்கள் அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை, 21 நாட்களுக்குப்பின் அமல்படுத்தியது. அமெரிக்க வரி விதிப்பு அமலில் இருக்கும் வரை, தங்களது வரி விதிப்பும் அமலில் இருக்கும் என்றும் அப்போதைய பிரதமர் ட்ரூடோ கூறினார். ஆனால், அவருக்குப்பின், கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னே பதவியேற்றுள்ள நிலையில், காட்சிகளும் மாறியுள்ளன.
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய ட்ரம்ப்பின் பதிவு
இப்படிப்பட்ட சூழலில், ட்ரம்ப் நேற்று ஒரு பதிவை வெளியிட்டார். அதில், அமெரிக்காவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் கனடாவுடன் இணைந்து செயல்பட்டால், அவர்களின் சிறந்த நண்பனான அமெரிக்காவை பாதுகாக்க, தற்போது திட்டமிட்டுள்ளதை விட பெரிய அளவிலான வரிகள், அந்நாடுகளுக்கு விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த பதிவால் ஐரோப்பாவிற்கும் தலைவலி தொடங்கியது. ஐரோப்பாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக விளங்கும் அமெரிக்காவின் இந்த முடிவால், பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை. இதனால், தற்போது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் உறவை முறிப்பதாக அறிவித்த கனடா
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த பதிவைத் தொடர்ந்து, கனடா பிரதமர் மார்க் கார்னே, அமெரிக்கா உடனான உறவு குறித்து ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்தார். அதன்படி, கனடா அதன் அண்டை நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டியதன் அவசியம் காரணமாக, அமெரிக்கா உடனான பழைய உறவு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா இனியும் ஒரு நம்பகமான பங்காளியாக இல்லை என்பது தெளிவாவதாகவும், விரிவான பேச்சுவார்த்தை மூலம், நம்பிக்கையின் ஒரு அங்கத்தை மீண்டும் நிலைநாட்ட முடியும், ஆனால், முடிவில் இருந்து பின்வாங்க முடியாது என்றும் கார்னே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பு, இறுக்கமான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பழைய உறவு முடிந்துவிட்டதாக கூறிய கார்னே, கனடா அதன் தெற்கு அண்டை நாடுகளுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஆனாலும், கனடா-அமெரிக்காவின் பாதுகாப்பு, வர்த்தக உறவுகள் குறித்த பரந்த மறுபரிசீலனைக்கு ஒரு நேரம் வரும் என்றும் கார்னே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனடாவின் இந்த முடிவைத் தொடர்ந்து, அமெரிக்கா என்ன எதிர்வினையாற்றப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

