MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: நூறு நாள் வேலை திட்டத்தில் 2025-26 நிதியாண்டில், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

MGNREGS Wages: நூறு நாள் வேலை திட்டத்தில் 2025-26 நிதியாண்டில், தமிழக பணியாளர்களுக்கு ரூ.17 ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு அறிவிப்பு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ், 2025-26 நிதியாண்டிற்கான ஊதியத்தை 2-7% வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கிராமப்புற வேலை உறுதித் திட்டங்களை நடத்துவதற்கான முதன்மை அமைச்சகமான ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (MoRD), 2025-26 நிதியாண்டுக்கான NREGS ஊதியத்தை திருத்தி அறிவித்துள்ளது. அதன்படி, 2025-26 ஆம் ஆண்டிற்கான NREGS ஊதிய விகிதங்கள் 2.33-7.48% வரை உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது ரூ.7 முதல் ரூ.26 வரை ஊதியம் உயர்ந்துள்ளது.
எந்த மாநிலத்திற்கு அதிக ஊதிய உயர்வு?
மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் ஊதியங்கள் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளன. ஹரியானாவில் அதிகபட்சமாக ரூ.26 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது அங்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரூ.374 என்ற ஊதியமானது ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. எந்தவொரு மாநிலத்திலும் நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 ஐத் தொடுவது இதுவே முதல் முறை ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், 2005 இன் பிரிவு 6 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊதிய விகிதங்கள் நிதியாண்டின் முதல் நாள் (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு எவ்வளவு?
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தற்போது 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதிலிருந்து 5.33 சதவிகிதம் அதாவது 17 ரூபாயை உயர்த்தி, இனி நாளொன்றிற்கு ரூ.336 ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கான 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை, மத்திய அரசு விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவும் சூழலில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டு ஊழியர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதனடிப்படையில் ஊதிய உயர்வு?
கிராமப்புறங்களில் பணவீக்க அதிகரிப்பைப் பிரதிபலிக்கும் CPI-AL ( விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு) மாற்றங்களின்படி நூறு நாள் வேலை திட்டத்தின் ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் (2024-25), கோவா அதன் முந்தைய ஆண்டை (2022-23) விட அதிகபட்சமாக 10.56% ஊதிய உயர்வைக் கண்டது. உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மிகக் குறைந்த அளவில் 3.04% ஊதிய உயர்வை பதிவு செய்தன. நடப்பு நிதியாண்டில் (2024-25), மார்ச் 19 வரை 5.66 கோடி குடும்பங்கள் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தைப் பெற்றுள்ளன.
100 நாள் வேலை திட்டம் யாருக்கானது?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ், உடலுழைப்பு வேலைகளைச் செய்யும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு கிராமப்புற குடும்பமும், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பைப் பெற உரிமை உண்டு.
சில சதர்ப்பங்களில் அரசாங்கம் கூடுதலாக 50 நாட்கள் கூலி வேலைவாய்ப்பை (நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களுக்கு மேல்) அனுமதிக்கிறது. உதாரணமாக, வனப்பகுதியில் உள்ள ஒவ்வொரு பட்டியல் பழங்குடி குடும்பமும் NREGS இன் கீழ் 150 நாட்கள் வேலை பெற உரிமை உண்டு, அத்தகைய குடும்பங்களுக்கு வன உரிமைச் சட்டம், 2016 இன் கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்த தனியார் சொத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், MGNREGA சட்டத்தின் பிரிவு 3(4) இன் கீழ், வறட்சி அல்லது இயற்கை பேரிடர் (உள்துறை அமைச்சகத்தின்படி) அறிவிக்கப்பட்ட கிராமப்புறங்களில், ஒரு நிதியாண்டில் கூடுதலாக 50 நாட்கள் ஒதுக்கப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

