BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
BCCI Coach Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ள சில ஊழியர்களை நீக்க, பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BCCI Coach Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ள அபிஷேக் நாயர் உள்ளிட்டோர் கழற்றிவிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ அதிரடி முடிவு
வரும் ஜுன் மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்காக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் துணை ஊழியர்களில் (Supporting Staff) பெரிய மாற்றங்களைச் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உதவி பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் தங்கள் பணியில் தொடர அணி நிர்வாகம் மத்தியில் பெரிய ஆதரவு இல்லை எனவும், இதுதொடர்பான இறுதி முடிவு, நாளை கவுகாத்தியில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கம்பீர் அப்செட்:
கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றபோது, ரியான் டென் டோஷேட் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர். NCA மற்றும் A அணியின் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பேட்டிங் பயிற்சியாளராக ஆனபோது, முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதோடு, மூன்று த்ரோடவுன் நிபுணர்கள், இரண்டு மசாஜ் தெரபிஸ்ட்கள், ஒரு சீனியர் மற்றும் ஒரு ஜூனியர் பிசியோதெரபிஸ்ட், ஒரு மருத்துவர் குழு, பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு மேலாளர், கணினி ஆய்வாளர் மற்றும் ஒரு சில தளவாட மற்றும் ஊடக மேலாளர்கள் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வென்ற போது இந்த குழு அணிக்கு பக்கபலமாக இருந்தது. ஆனால், அந்த குழுவில் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க பிசிசிஐ தற்போது திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பாக மே-ஜூன் மாதங்களில் லயன்ஸ் அணியுடன் இரண்டு, நான்கு நாள் போட்டிகளில் விளையாடும் 'ஏ' அணியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் சிலர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் நடைபெறும் முதல் டெஸ்டுடன் இங்கிலாந்துக்கான 45 நாள் பயணத்தை இந்தியா தொடங்கும். அதைதொடர்ந்து, இந்தியா மற்றுன் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி, ஜுலை 31ம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிளே-ஆஃப் சுற்றின் போது இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















