‛அறிகுறி இருந்தால் அலட்சியம் வேண்டாம்... 1.11 லட்சம் படுக்கைகள் தயார்’ -சுகாதாரத்துறை செயலாளர்!
காங்கோ நாட்டில் இருந்து வந்த ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கு முந்தைய அறிகுறி தென்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 70க்கும் மேற்பட்ட கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக ஓமிக்ரான் கருதப்படுகிறது. இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்தியாவில் வெறும் 2 ஓமிக்ரான் கேஸ்கள் மட்டுமே இருந்தது. கர்நாடகாவில் இரண்டு கேஸ்களும் பதிவானது. ஆனால் அதன்பின் சரசரவென அதிகரித்த கேஸ்கள் தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் 32 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு நினைக்க முடியாத வேகத்தில் ஓமிக்ரான் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த நபருக்கு ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தோஹா வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு ஜீன் மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு ஓமிக்ரான் இருப்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு லேசான ஓமிக்ரான் கொரோனா பாதிப்பே உள்ளது. அவர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் தொடர்பில் இருந்த சென்னையை சேர்ந்த 8 பேர் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழகம் முழுவதும் 1.11 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. காங்கோ நாட்டில் இருந்து வந்த ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கு முந்தைய அறிகுறி தென்பட்டுள்ளது. அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆரணியை சேர்ந்த பெண் உட்பட 8 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2 டோஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம். ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் பரவி உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா: 32
ராஜஸ்தான்: 17
டெல்லி: 6
கேரளா: 5
குஜராத்: 4
கர்நாடகா: 3
தெலுங்கானா : 2
ஆந்திரா: 1
சண்டிகர்: 1
மேற்கு வங்கம்: 1
தமிழ்நாடு: 1
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )