TVK Vijay: அதிமுக கூட்டணிக்கு விஜய் ரெடி! ராஜ்மோகன் அறிக்கை மறைமுகமாக சொல்வது என்ன?
எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணியில் பிரம்மாண்ட கட்சி இணைய உள்ளதாக கூறியதையடுத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் அவர்களுடன் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ளதால் திமுக, அதிமுக. நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த கட்சிகளுக்கு நிகராக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
எடப்பாடி சொன்ன பிரம்மாண்ட கட்சி:
தவெக யாருடன் கூட்டணி என்ற கேள்வி அனைவருடனும் முன்வைக்கப்படும் நிலையில், தேர்தல் சுற்றுப்பயணத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி நினைத்துக்கூட பார்க்க முடியாத பிரம்மாண்டமான கட்சி கூட்டணியில் இணைய உள்ளதாக கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சால் அதிமுகவில் இணையப்போகும் அந்த பெரிய கட்சி தவெக-தான் என்று பேச்சு அடிபட்டு வருகிறது. அதற்காக, அவர்கள் விரைவில் பாஜக-வை கூட்டணியில் இருந்து விலக்கப்போகிறார்கள்? என்ற பேச்சும் பலமாக எழுந்து வருகிறது.

அதிமுக-விற்கு மறைமுக பதிலா?
இந்த நிலையில், தவெக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும், மதவாத சக்திகளை வீழ்த்த சமத்துவ சக்திகளை சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றும், எங்கள் நிரந்தர எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
கற்பனைகளும் உண்மையும் !
— Rajmohan (@imrajmohan) July 18, 2025
தமிழகத்தின் முதன்மை சக்தியான தவெக தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் வெற்றித் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது.
தங்கள்…
ராஜ்மோகனின் இந்த பதிவு அதிமுக-வுடன் தவெக கூட்டணி இல்லை என்று வெளிப்படையாக இருப்பது போல இருக்கிறது. ஆனால், இதை நன்றாக உற்றுநோக்கினால் பாஜக கூட்டணியில் இருக்கும் வரை நாங்கள் கூட்டணிக்குள் வரமாட்டோம் என்பதற்கான அறிவிப்பாகவே இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, பாஜக-வை கூட்டணியில் இருந்து நீக்கி கூட்டணியை நாம் வைக்கலாம் என்பதன் மறைமுக அழைப்பாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வலுவான கூட்டணி அமைப்பாரா எடப்பாடி?
அவ்வாறு அதிமுக-வுடன் தவெக கூட்டு சேரும்போது, முதலமைச்சர் பதவியை விஜய் விட்டுத்தரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் தனித்தே ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வரும் நிலையில், அமித்ஷா சொல்வதுபோல கூட்டணி ஆட்சிதான் என்று அண்ணாமலை உள்ளிட்ட பாஜக-வினர் பேசி வருவது அதிமுக-வினருக்கும் தலைவலியை உண்டாக்கி வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில், வலுவான கூட்டணியாக திமுக வரும் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் அவர்களை வீழ்த்த வலுவான கூட்டணியை அதிமுக அமைக்க வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது. பாமக-வும் உட்கட்சி பிரச்சினையால் மோதலில் இருப்பதால் அதிமுக போன்ற பெரிய கட்சி, வலுவான கட்சி கூட்டணிக்குள் வர வேண்டியது எடப்பாடி பழனிசாமிக்கு கட்டாயமாகியுள்ளது. மேலும், விஜய்க்கு முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் பெரியளவில் விழும் என்பதே பலரின் கணிப்பாக உள்ளது.





















