Vetrimaaran: ‘என் படங்களில் டப்பிங் பிரச்னை இருக்கும்.. அயோத்தி இன்றைய சூழலில் பேசவேண்டிய கதை..’ - வெற்றிமாறன்
“எங்கள் நோக்கம் தான் எங்கள் மற்ற குறைகளை மறைக்குதுனு நினைக்கிறேன். சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய கதைகளை நாங்கள் தருவதால் இது நடக்கிறது என நம்புகிறேன்” - வெற்றிமாறன்
சென்னை சர்வதேவ திரைப்பட விழா நேற்று நிறைவுபெற்றது. டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில் பல உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இந்நிலையில் நேற்றைய நிறைவு நாளில் சிறந்த படமாக அயோத்தி திரைப்படமும், சிறந்த நடிகராக வடிவேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடிகை ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் நடுவர்களின் சிறப்பு விருது விசாரணை திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்டு விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:
‘சமரசம் செய்து படம் எடுக்கிறோம்'
"வணிக தேவைகள் பூர்த்தியாகும்படி ஒரு சினிமா செய்வது கொஞ்சம் சவால் தான். ஏனென்றால் சில இடங்களில் நாம் கண்டெண்ட்டில் சமரசம் செய்து கொள்வோம். சில நேரங்களில் ஜனரஞ்சகத் தன்மையில் சமரசம் செய்து கொள்வோம். இதனால் நாம் சாதாரண படங்களை எடுக்கும் நிலைக்கு ஆளாவோம். படத்தின் தரம், அவை எடுத்து முடிக்கப்படும் காலம், நாம் தரும் விஷயம் ஆகிய தேவைகளின்படி சில சமயம் சாதாரண படங்கள் தரும் நிலைக்கு ஆளாகிறோம்.
எல்லாருக்கும் தெரியும். என் படங்களில் டப்பிங் சிங்க் இருக்காது. எல்லா படங்களையும் நிறைய குறைகள், தவறுகளுடன் படத்தை எடுத்து முடிக்கிறோம். ஆனால் எங்கள் மொத்த குழுவையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள், பாராட்டுகிறீர்கள். எங்கள் கதையின் நோக்கம் தான் எங்கள் மற்ற குறைகளை மறைக்கடிக்கிறதுனு நினைக்கிறேன்.
அயோத்தி படத்தின் நோக்கம்
சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய கதைகளை நாங்கள் தருவதால் இது நடக்கிறது என நம்புகிறேன். கண்டிப்பாக எங்கள் படங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் சொல்லவில்லை. விடுதலை படத்துக்கு இந்த அங்கீகாரம் அதனால் தான் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த படங்களில் இந்த சமரசங்களை குறைத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக படங்கள் தருவேன் என நம்புகிறேன். தேர்வுக்குழுவுக்கு நன்றி. விடுதலை மாதிரி படத்துக்கு மக்களின் ஆதரவும், திரைப்பட விழாவில் தரப்படும் அங்கீகாரமும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அயோத்தி திரைப்படம் பற்றி இங்கு சொல்ல வேண்டும். படங்களின் நோக்கமும் ரொம்ப முக்கியம். இன்னைக்கு அயோத்தி மாதிரியான கதை பேசப்பட வேண்டிய நோக்கம் இன்றைக்கு உள்ளது. அதற்கு நன்றி. நான் இரண்டு, மூன்று இடங்களில் அயோத்தி படத்தைப் பற்றி பேச மறந்துவிட்டேன். கடந்த சில ஆண்டுகளில் வந்த சிறப்பான படங்களில் அயோத்தியும் ஒன்று” எனப் பேசியுள்ளார்.
இந்த விழாவில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்ட நிலையில் படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக உடன்பால் தேர்வு செய்யப்பட்டு அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.