Lok Sabha Election 2024: சர்கார் பட பாணியில் நீதிமன்றத்தை நாடி வாக்களித்த முதல் பெண் - திருச்சியில் நெகிழ்ச்சி
திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிலிருந்த பெண் நீதிமன்றத்தை நாடி , வாக்குரிமை பெற்று தேர்தலில் வாக்களித்த முதல் பெண் ஆவார்.

திருச்சி மாநகர், கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வாக்களிக்க வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களில் முதல் முறையாக இவருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் நளினி கூறியது..
இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள். அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் தான் உள்ளனர். எங்களை இலங்கை தமிழர் என்று தெரிவிப்பதை விட இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் எதிர்பார்கிறோம் என தெரிவித்தார்.
எங்களுக்கான பிறப்பு சான்றிதழில் இந்திய தமிழர் என்றும், இலங்கையில் வழங்கப்படும் அடையாள அட்டையில், இந்தியர் என்பதற்காக எக்ஸ் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள். அதனால் அங்கு வாக்குரிமை இல்லாத நிலையில், இங்கு வந்து 40 ஆண்டுகள் ஆகியும் அந்த உரிமை இல்லாமல் முடங்கி கிடந்தோம். பொதுவாக முகாமில் உள்ள அனைவருமே இந்திய குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் இருக்கிறோம். மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் எதிர்பார்ப்பை கவனத்தில் கொண்டு குடியுரிமை வழங்க வேண்டும். தற்போது அரசு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் முதல் முறையாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள எனக்கு வாக்குரிமை கிடைத்துள்ளது. இதை என்னைச் சார்ந்த மக்களுக்கான உரிமையாக கருதுகிறேன் என தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் போராடி வாக்குரிமை பெற்ற ஈழத்தமிழச்சி
எனது தாத்தா பாட்டி இந்தியாவில் பிறந்தவர்கள் எனது அப்பா, அம்மா இந்தியா வம்சாவளியினர் நான் ராமநாதபுரத்தில் தான் பிறந்தேன். இதன் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு இந்திய பிரஜை என்பதற்கு ஆவணங்கள் வேண்டும் என்பதற்காக விண்ணப்பித்து போராடினேன். இறுதியாக எனக்கு இந்திய குடியுரிமைக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து தீர வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி தனது வாக்குரிமையை பெற்றேன் என்றார். இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அன்னை ஆசிரமம் எம் எம் நடுநிலைப்பள்ளியில் நளினி தனது வாழ்நாளில் முதல் வாக்குப்பதிவினை செலுத்தினார். என்னை போல் குடியுரிமைக்காகவும் வாக்குரிமைக்காகவும் ஏராளமானோர் முகாமில் உள்ளதாகவும் இந்தியா வம்சாவளியினர் குடியுரிமை வாக்குரிமை கிடைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்த பொழுது, அகதிகள் முகாமில் உள்ளார். ஆனால் இந்திய பிரஜை இந்திய குடியுரிமை பெற்றவர். மற்றவர்கள் அகதிகள் என்பதால் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. இவர் குடியுரிமை பெற்றுள்ளதால் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பெற்றுள்ளதால் இவர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார் என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

